மதுரை ரயில்வே ஸ்டேஷனில் சுங்குடி சேலை விற்பனை அமோகம்; 45 பொருட்களின் விற்பனையும் களைகட்டுகிறது

மதுரை : மதுரை ரயில்வே ஸ்டேஷனில் 'ஒரு நிலையம் ஒரு பொருள்' திட்டத்தின் கிழ் விற்கப்படும் சுங்குடி சேலை, விற்பனையில் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் 74 கைத்தறி நெசவாளர்கள் பயனடைந்தனர்.
உள்நாட்டு தயாரிப்புகள், கைவினைப்பொருட்கள், உள்ளூர் தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தும் வகையில் ரயில்வே ஸ்டேஷன்களில் 'ஒரு நிலையம் ஒரு பொருள்' விற்பனைத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மதுரை கோட்டத்திற்குட்பட்ட 34 ரயில்வே ஸ்டேஷன்களில் இத்திட்டத்தின் கீழ் 45 பிரபல பொருட்களின் விற்பனை ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மதுரை ரயில்வே ஸ்டேஷனில் உள்ளூர் கைத்தறி நெசவாளர்கள், நெசவாளர் குழுக்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைக்கப்பட்ட சுங்குடி சேலை விற்பனை ஸ்டாலில், 2022 ஏப்., முதல் தற்போது வரை ரூ.1.48 கோடி மதிப்பிலான சேலைகள் விற்று முன்னிலை வகிக்கிறது.
துாத்துக்குடி ஸ்டேஷனில் மக்ரூன் பிஸ்கட் ரூ. 60.18 லட்சத்திற்கு விற்கப்பட்டு 2ம் இடத்தில் உள்ளது. திருநெல்வேலியில் பத்தமடை பாய் ரூ. 44.28 லட்சம், திருச்செந்துாரில் பனை பொருட்கள் ரூ. 31.64 லட்சம், திண்டுக்கல்லில் சின்னாளப்பட்டி கைத்தறி சேலை ரூ. 26.15 லட்சம், கோவில்பட்டியில் கடலை மிட்டாய் ரூ. 24.73 லட்சம், ஸ்ரீவில்லிபுத்துாரில் பால் கோவா ரூ. 14.11 லட்சத்திற்கு விற்பனையாகின.
இவற்றுடன் மணப்பாறை முறுக்கு, சேவு, செட்டிநாடு பலகாரங்கள், பஞ்சாமிர்தம், மஸ்கோத் அல்வா, வெட்டி வேர் பொருட்கள், சிறுதானிய உணவு பொருட்களும் பல்வேறு ஸ்டேஷன்களில் விற்கப்படுகின்றன. இதன் மூலம் 350க்கும் மேற்பட்ட உள்ளூர் கைவினை கலைஞர்கள், சிறு விற்பனையாளர்கள் பயனடைகின்றனர்.
ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் வழங்கியுள்ள அடையாள அட்டையுடன் கைவினை கலைஞர்கள், நெசவாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள், கூட்டுறவு சங்கங்கள், சிறு குறு விற்பனையாளர்கள் தங்கள் தயாரிப்புகளை உள்ளூர் ரயில்வே ஸ்டேஷனில் விற்பனை செய்ய அந்தந்த ஸ்டேஷன் மேலாளர்களை அணுகலாம்.
இதற்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டு, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பயனாளர், 15 நாட்களுக்குள் குறைந்த கட்டணத்துடன் உள்ளூர் தயாரிப்புகளை விற்க அனுமதிக்கப்படுவார். விற்பனை அளவை பொறுத்து மேலும் 15 நாட்களுக்கு அனுமதி நீட்டிக்கப்படும் என்றனர்.
மேலும்
-
ஒரே நாளில் எகிறிய தங்கம் விலையால் பெண்கள் அதிர்ச்சி; சவரனுக்கு ரூ.1760 உயர்வு
-
தமிழகத்தில் பரவலாக மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
குண்டு காயத்துடன் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி: ஐ.எஸ்.ஐ., பாதுகாப்புடன் சிகிச்சை
-
ரூ.2,291 கோடி கல்வி நிதி வழங்குங்க; மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு
-
சர்வதேச புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர்; குவியும் வாழ்த்துகள்
-
சீனா, ரஷ்யாவை எதிர்கொள்ள ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு அறிவித்தார் டிரம்ப்; சிறப்புகள் ஏராளம்!