13 அமைச்சர், 60 எம்.எல்.ஏ.,க்களுக்கு சட்டசபை தேர்தலில் 'சீட்' இல்லை: செல்வாக்கு சரிவால் தி.மு.க., முடிவு

சென்னை : சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராமல், 13 அமைச்சர்கள், 60 எம்.எல்.ஏ.,க்களுக்கு கல்தா தர, தி.மு.க., தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2021ல் ஆட்சியை பிடித்த தி.மு.க., நான்கு ஆண்டுகளை கடந்துள்ளது. ஐந்தாம் ஆண்டில், அமலாக்கத் துறை சோதனை, நிதி பற்றாக்குறை, சட்டம் - ஒழுங்கு பிரச்னை என பல நெருக்கடிகளை, தி.மு.க., ஆட்சி எதிர்கொண்டு வருகிறது.
அதே நேரத்தில், 2026 சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கான பணிகளையும், தி.மு.க., தலைமை துவங்கி விட்டது. தேர்தல் வியூகம் வகுப்பதற்கு ஒரு நிறுவனம், தொகுதி அரசியல் நிலவரங்களை ஆராய்ந்து சொல்வதற்கு ஒரு நிறுவனம், சமூக வலைதளங்களில் பிரசாரங்களை முன்னெடுக்க, ஒரு நிறுவனம் என, மூன்று நிறுவனங்களை, தி.மு.க., தலைமை நியமித்து உள்ளது.
இதில், 2021 சட்டசபை தேர்தலில் பணியாற்றிய நிறுவனமும் அடக்கம். சமீபத்தில் இணைந்துள்ள இந்நிறுவனத்திற்கு, சென்னை அண்ணா சாலையில் அலுவலகம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அரசியல் நிலவரங்களை ஆராய்ந்து சொல்லும் நிறுவனம் வாயிலாக, தொகுதி வாரியாக பல்வேறு தகவல்கள் திரட்டப்பட்டு உள்ளன.
அதில், தற்போதைய அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களின் செயல்பாடுகள், தனிப்பட்ட செல்வாக்கு, சமுதாய ரீதியான ஓட்டு வங்கி உள்ளிட்ட, பல்வேறு காரணிகள் அலசி ஆராயப்பட்டுள்ளன. அதன்படி, இரண்டு முறை வெற்றி பெற்ற பல எம்.எல்.ஏ.,க்களின் செல்வாக்கு, தொகுதியில் சரிந்துள்ளது தெரியவந்துள்ளது.
மாவட்ட மக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல், வசூலிப்பில் மட்டுமே கவனம் செலுத்திய, சில அமைச்சர்கள் மீது அதிருப்தி அதிகரித்திருப்பதும் அம்பலமாகி உள்ளது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது, தனிப்பட்ட காரணங்களால், 60 எம்.எல்.ஏ.,க்களுக்கு வெற்றி வாய்ப்பு குறைந்துள்ளது.
இதனால், வரும் தேர்தலில், அவர்களுக்கு 'சீட்' வழங்கக் கூடாது என்ற முடிவை, தி.மு.க., தலைமை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐந்து அமைச்சர்களுக்கு, 'சீட்' இல்லை என்ற முடிவை, ஏற்கனவே கட்சி தலைமை எடுத்துள்ளது. அதற்கு பதிலாக, அவர்களது வாரிசுகள் அல்லது தொகுதியில் செல்வாக்குள்ள மற்ற நபர்களை களமிறக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
அதன்படி, வட மாவட்டங்களை சேர்ந்த இருவர், டெல்டாவை சேர்ந்த இருவர், சென்னை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், தென் மாவட்டத்தை சேர்ந்த மூவர் உள்பட, 13 அமைச்சர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என தெரிகிறது.
கடைசி நேரத்தில் கட்சி தலைமையின் முடிவில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே, அவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிட்டும் என தெரிகிறது.

மேலும்
-
தமிழகத்தில் பரவலாக மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
குண்டு காயத்துடன் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி: ஐ.எஸ்.ஐ., பாதுகாப்புடன் சிகிச்சை
-
ரூ.2,291 கோடி கல்வி நிதி வழங்குங்க; மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு
-
சர்வதேச புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர்; குவியும் வாழ்த்துகள்
-
சீனா, ரஷ்யாவை எதிர்கொள்ள ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு அறிவித்தார் டிரம்ப்; சிறப்புகள் ஏராளம்!
-
பாதை வரிசை மாறிய பகுதியில் காலி மனை வாங்குவது சரியா?