ஹிந்து ஓட்டுகளை மொத்தமாக வளைக்க இ.பி.எஸ்., வகுத்துள்ள ஆன்மிக வியூகம்

ஹிந்துக்களின் ஓட்டுகளை அறுவடை செய்ய, 'ஆன்மிக வியூகம்' வகுத்துள்ள அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, கோவில் கோவிலாக தரிசனம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் சிறுபான்மையினர் ஓட்டுகள் மொத்தமாக, தி.மு.க., அணிக்கு கிடைத்து வந்தன. இந்த தேர்தலில், நாம் தமிழர் கட்சி, த.வெ.க., என, அந்த ஓட்டுகள் சிதறும் நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
அழைப்பு
எனவே, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்துள்ள பழனிசாமி, ஒட்டுமொத்த ஹிந்துக்களின் ஓட்டுகளை வளைக்க ஆன்மிகத்தை வைத்து வியூகம் வகுத்துள்ளதாக அவரது கட்சியினர் கூறுகின்றனர்.
இதுகுறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: அடுத்த மாதம் 22ல் மதுரையில், 'குன்றம் காக்க, கோவிலை காக்க' என்ற தலைப்பில், முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பழனிசாமிக்கு, ஹிந்து முன்னணி தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, ஒட்டுமொத்த ஹிந்துக்களின் ஓட்டுகளை வளைத்து, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை வெற்றி பெற வைக்க முடியும் என, பழனிசாமி கருதுகிறார்.
சமீபத்தில் தன் பிறந்த நாளை ஒட்டி, திருப்பதி சென்று சிறப்பு பூஜை நடத்திய பழனிசாமி, சேலம் மாவட்டம், தலைவாசல் அருகில் உள்ள 1,500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆறகழூர் அஷ்டபைரவர் கோவிலில், சிறப்பு வழிபாடு செய்துள்ளார்.
அங்குள்ள சிவபெருமான், காமநாத ஈஸ்வர் என்ற பெயரில் அருள்புரிகிறார். அசுரர்களை அழிக்க, திசைக்கு எட்டு பைரவர் வீதம் 64 பைரவர்கள் தோன்றி, அந்தகன் மற்றும் அவரது அசுரர் படைகளை அழித்தனர்.
அன்னதானம்
வரும் சட்டசபை தேர்தலில், மெகா கூட்டணி அமைத்து, தி.மு.க., கூட்டணியை வீழ்த்தி, கிரீடம் சூடுவதற்காகவே, இந்த சிறப்பு வழிபாட்டை நேற்று அவர், அக்கோவிலில் நடத்தியுள்ளார்; 10,000 பேருக்கு அன்னதானமும் வழங்கியுள்ளார்.
அஷ்ட பைரவருக்கு, 40 லட்சம் ரூபாய் செலவில் வெள்ளி அங்கியை தன் சொந்த செலவில் வழங்கியுள்ளார். இந்த கோவிலை தொடர்ந்து, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளே ஜீவசமாதி அடைந்த எல்லாம் வல்ல சித்தரை வழிபட, விரைவில் மதுரை செல்ல உள்ளார். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.




மேலும்
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு; கச்சா எண்ணெய் விலை உயர்கிறது!
-
தலைமுடி மாற்று அறுவை சிகிச்சையில் விபரீதம்; பாக்டீரியா பாதிப்பால் கேரளா இளைஞர் உயிருக்கு ஆபத்து
-
ஒரே நாளில் எகிறிய தங்கம் விலையால் பெண்கள் அதிர்ச்சி; சவரனுக்கு ரூ.1760 உயர்வு
-
தமிழகத்தில் பரவலாக மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
குண்டு காயத்துடன் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி: ஐ.எஸ்.ஐ., பாதுகாப்புடன் சிகிச்சை
-
ரூ.2,291 கோடி கல்வி நிதி வழங்குங்க; மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு