திருநள்ளாறு - பேரளம் அகல பாதையில் மின்சார ரயில் சோதனை ஓட்டம்

1

காரைக்கால்: காரைக்கால்- பேரளம் இடையே ரூ. 180 கோடியில் அகல ரயில்பாதை பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடந்தது.

காரைக்கால் மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. முக்கியமாக, சனி பகாவன் கோவில் சுற்றுலா வசதிக்காக கோவில் நகர திட்டம் உருவாக்கப்பட்டது.

இதனால் காரைக்கால் அம்மையார், நாகூர் தர்கா, வேளாங்கண்ணி மாதா உள்ளிட்ட புனித தளங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும் காரைக்கால் வந்து செல்கின்றனர்.

தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலத்திற்கு காரைக்காலிருந்து ரயில் சேவை துவக்கப்பட்டது. இதில் காரைக்கால் திருநள்ளாறு- பேரளம் இடையே 23 கி.மீட்டருக்கு கடந்த 1951ம் ஆண்டு மீட்டர் கேஜ் ரயில் பாதை அமைக்கப்பட்டு, ரயில் சேவை துவங்கப்பட்டது.

இந்த வழித்தடத்தில் அம்பகரத்துார், தேவமாபுரம், சுரக்குடி ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் இயங்கியது. போதிய வருவாய் இல்லை என்று கடந்த 1984ம் ஆண்டு ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மத்திய, மாநில அரசு முயற்சியால் காரைக்கால் திருநள்ளாறு வழியாக பேரளத்திற்கு புதிய அகல ரயில் பாதை அமைக்கும் பணி, கடந்த 2022ம் ஆண்டு ரூ.180கோடி மதிப்பில் துவங்கப்பட்டது.

புதிய ரயில் திட்டத்தில் கோவில்பத்து, திருநள்ளாறு, பத்தக்குடி, அம்பகரத்துார் உள்ளிட்ட நான்கு இடங்களில் ரயில் நிலையங்கள், திருநள்ளாறு பகுதியில் நான்கு வழி தண்டவாலம் பணிகள், 23 இடங்களில் சிறிய பாலங்கள், 6 இடங்களில் சுரங்கப் பாதை, மேம்பாலம் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

மேலும் பாரதியார் சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் ரயில்வே கேட் அமைக்கப்பட்டது. இந்தாண்டு அனைத்து பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் ரயில்சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தண்டவாளம் அமைக்கப்பட்டு இருப்புறம் ஜல்லிகள் கொட்டப்பட்டு, பணிகள் முடிக்கப்பட்டது. அதையடுத்து நேற்று காரைக்கால் திருநள்ளார்- பேரளம் இடையே மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடந்தது.

முன்னதாக சிறப்பு ரயில் மூலம் காரைக்கால், கோவில்பத்து, திருநள்ளாறு, பத்தக்குடி, அம்பகரத்துார் உள்ளிட்ட ரயில் நிலையங்களை தெற்கு ரயில்வே முதன்மை தலைமை மின் பொறியாளர் சோமேஷ் குமார் தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சிறப்பு ரயில் மூலம் ஆய்வு மேற்கொண்டனர்.

பின், மதியம் மூன்று மணிக்கு பேரளம் பகுதியிலிருந்து காரைக்காலுக்கு மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடந்தது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு காரைக்கால்- பேரளம் ரயில் மீண்டும் துவங்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

மேலும் விரைவில் பயணிகள் ரயில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement