கவர்னர்கள் மூலம் மாநில அரசுகளுக்கு தடை போடும் மத்திய அரசு: ராகுல்

புதுடில்லி: '' கவர்னர்களை தவறாக பயன்படுத்தி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தடை போடுகிறது. இதனை தடுக்க வேண்டும்,'' என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
'மசோதாவுக்கு ஒப்புதல் கொடுப்பதா வேண்டாமா என்று முடிவு எடுக்க கவர்னர் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு நிர்ணயிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு அரசியல் சாசனம் அதிகாரம் அளித்துள்ளதா?' என, ஜனாதிபதி திரவுபதி முர்மு கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக 14 கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு பதில் அளிக்கும்படி சுப்ரீம் கோர்ட்டை ஜனாதிபதி கேட்டுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ' சுப்ரீம் கோர்ட்டில் விளக்கம் கோரி எழுப்பப்பட்டுள்ள வினாக்கள், அரசியலமைப்பு சட்டம், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே அதிகாரங்களை பகிர்ந்தளித்துள்ளதன் அடிப்படையையே சீர்குலைக்கவும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில சட்டசபைகளை திறனற்றதாக்கவும் நினைக்கும் மத்திய அரசின் தீய எண்ணத்தை வெளிப்படுத்துகிறது.மாநில சுயாட்சிக்கே இது உடனடி ஆபத்தை உருவாக்கியுள்ளது.
இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில், பா.ஜ., அல்லாத அனைத்து மாநில அரசுகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதற்காக, சட்டப் போராட்டத்தில் இணையுமாறு வலியுறுத்துகிறேன். ஒட்டுமொத்த ஆற்றலை ஒருங்கிணைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம்' எனத் தெரிவித்து இருந்தார்.
இந்த பதிவை மேற்கோள் காட்டி லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: இந்தியாவின் பலம் என்பது அதன் பன்முகத்தன்மையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் சொந்த குரல் உள்ளது. மத்திய அரசு, கவர்னர்களை தவறாக பயன்படுத்தி, அந்த குரல்களை நசுக்கவும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுகளுக்கு தடையை ஏற்படுத்தவும் முயற்சி செய்கிறது.
இது கூட்டாட்சி மீதான தாக்குதல். இதனை எதிர்க்க வேண்டும் என ராகுல் கூறியுள்ளார்.










மேலும்
-
மக்காச்சோளம் அறுவடை ஆர்வமுடன் பங்கேற்ற விவசாயிகள்
-
பெண் கைதியை ஹோட்டலில் தங்கவைத்த எஸ்.ஐ., சஸ்பெண்ட்
-
விபத்து ஏற்படுத்திய ஏட்டு தரமணியில் தீக்குளித்து பலி
-
கோவில் கும்பாபிஷேக நேரம் முடிவு செய்ய ஐவர் குழு
-
அன்புமணியுடன் எனக்கு எந்த மனக்கசப்பும் இல்லை பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ் தகவல்
-
குழாய் பதிப்பு பணியில் அலட்சியம் மீண்டும் தடம் புரண்டது அரசு பஸ்