ரூ.1 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட நக்சல் தலைவன் பசவராஜ் சுட்டுக்கொலை: பலத்த அடி கொடுத்தது பாதுகாப்பு படை!

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில், நக்சல் அமைப்பு தலைவன் பசவராஜ் சுட்டுக் கொல்லப்பட்டான். இவன் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு ரூ.1கோடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
சத்தீஸ்கரில் இன்று பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நக்சலைட்டுகள் 27 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில், நக்சல் அமைப்பின் தலைவன் நம்பலா கேசவ் ராவ் என்ற பசவராஜும் ஒருவன். 68 வயதான பசவராஜ், மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவன். இவன் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்) பொதுச் செயலாளராக இருந்துள்ளான்.
இவன் பல்வேறு சதி வேலைகளுக்கு திட்டம் தீட்டி கொடுத்துள்ளான். இவன் குறித்து தகவல் அளித்தால், ரூ. 1 கோடி சன்மானம் வழங்கப்படும் என என்.ஐ.ஏ., மற்றும் சத்தீஸ்கர் அரசு அறிவித்து இருந்தது.
இவனுக்கு, பிரகாஷ், கிருஷ்ணா, விஜய், பசவராஜ், உமேஷ், ராஜு மற்றும் கம்லு என பல்வேறு பெயர்கள் உள்ளன. இவனை நாடு முழுக்க உள்ள பாதுகாப்புப் படையினர் தேடி வந்தனர். இவனை சுட்டுக் கொன்றது நக்சல் அமைப்புக்கு மிகப்பெரிய பலத்த அடி என கருதப்படுகிறது.
இவனை பாதுகாப்பு படையினர் சுற்றுக் கொன்றதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி செய்துள்ளார்.
அமித்ஷா பாராட்டு
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நக்சலைட்டை ஒழிக்கும் போரில் ஒரு மைல்கல் சாதனை. இன்று, சத்தீஸ்கரின் நாராயண்பூரில் நடந்த என்கவுன்டரில், நமது பாதுகாப்புப் படையினர் நக்சலைட்டுக்கள் 27 பேரை சுட்டு வீழ்த்தியுள்ளனர். அவர்களில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்) பொதுச் செயலாளரும், நக்சல் இயக்கத்தின் தலைவனுமான நம்பலா கேசவ் ராவ் என்ற பசவராஜுவும் ஒருவன்.
நக்சலைட்டுக்கு எதிரான இந்தியாவின் மூன்று தசாப்த காலப்போரில், பொதுச் செயலாளர் பதவியில் இருந்த ஒருவன் நமது படைகளால் வீழ்த்தப்படுவது இதுவே முதல் முறை. நமது பாதுகாப்பு படையினரை பாராட்டுகிறேன். ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட் முடிந்த பிறகு, சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மஹாராஷ்டிராவில் நக்சலைட்டுகள் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
84 பேர் சரணடைந்துள்ளனர் என்பதையும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். மார்ச் 31, 2026க்கு முன்பு நக்சலைட்டை ஒழிக்க பா. ஜ., அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 27 பேர் சுட்டுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், "இந்த குறிப்பிடத்தக்க வெற்றிக்காக நமது பாதுகாப்பு படைகளை நினைத்து பெருமைப்படுகிறேன். நக்சலிசத்தை ஒழித்து, நமது மக்களுக்கு அமைதி மற்றும் வாழ்க்கையில் முன்னேற்றத்தை உறுதி செய்வதில் நமது அரசு உறுதிபூண்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.


மேலும்
-
2024ல் மட்டும் 18,200 ஹெக்டேர் காடுகள் அழிப்பு; அதிர்ச்சி தகவல்
-
அரிசி சர்ச்சையில் சிக்கிய ஜப்பான் விவசாய அமைச்சர் ராஜினாமா
-
விண்வெளிக்கு இந்தியர்களை அனுப்பும் திட்டத்திற்கு தயார்: இஸ்ரோ
-
டில்லியை தாக்கிய புழுதிப்புயல்; நடுவானில் 227 பேருடன் சென்ற விமானம் சேதம்
-
சிந்து, மாளவிகா தோல்வி: மலேசிய பாட்மின்டனில்
-
இந்திய ஜோடி ஏமாற்றம்: உலக டேபிள் டென்னிசில்