விண்வெளிக்கு இந்தியர்களை அனுப்பும் திட்டத்திற்கு தயார்: இஸ்ரோ

3

புவனேஸ்வர்: பிஎஸ்எல்வி-சி 61 /இஓஎஸ் -09 திட்டம் தோல்வி அடைந்தது தொடர்பாக தேசிய அளவிலான குழு விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ள இஸ்ரோ தலைவர் நாராயணன், 2027ல் விண்வெளிக்கு இந்தியர்களை அனுப்பும் திட்டத்திற்கு முழு வீச்சுடன் தயாராகி வருவதாக தெரிவித்தார்.

புவி கண்காணிப்பு, எல்லை பாதுகாப்பு பணிகளுக்காக இஓஎஸ்-09 (ரிசாட் -1பி) எனும் அதிநவீன ரேடார் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது. பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் கட்நத 18 ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டம் தோல்வியில் முடிந்தது.



இது தொடர்பாக புவனேஸ்வரில் இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது: பிஎஸ்எல்வி -சி 61 திட்டம், 3வது நிலையின் போது, ' சேம்பர் ' அழுத்தத்தில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக 4வது நிலையில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், அது தோல்வியில் முடிந்தது. இதற்கான காரணம் குறித்து தேசிய அளவிலான குழு அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது.


2025 ம் ஆண்டு இன்னும் முக்கியமான ஆண்டு. சந்திரயான்-4, சந்திரயான்-5 உள்ளிட்ட திட்டங்கள் உள்ளன. 2027 ல் ககன்யான் திட்டம் மூலம் விண்வெளிக்கு இந்தியரை அனுப்பி வைக்கும் திட்டத்துடன், உணவு, நீர் மற்றும் எரிசக்தி பாதுகாப்புக்காக இஸ்ரோ பணியாற்றி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement