கொலை குற்றவாளியல்ல: மோசடி செய்து ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்ற பூஜா கேத்கருக்கு முன்ஜாமின் வழங்கியது சுப்ரீம் கோர்ட்

10

புதுடில்லி: போலி சான்றிதழ் வழக்கில் ஐ.ஏ.எஸ்., பதவி பறிக்கப்பட்ட பூஜா கேத்கருக்கு சுப்ரீம் கோர்ட் முன்ஜாமின் வழங்கியது. அப்போது, அவர் கொலை குற்றத்தில் ஈடுபடவில்லை என நீதிமன்றம் தெரிவித்தது.


மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பூஜா கேத்கர் யு.பி.எஸ்.சி., தேர்வில் அகில இந்திய அளவில் 821வது இடத்தை பிடித்து பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணியில் சேர்ந்து, புனே உதவி கலெக்டராக நியமிக்கப்பட்டார்.


அரசால் வழங்கப்படாத வசதிகளை அத்துமீறி பெற்று தன் சொகுசு காரில் அரசு பெயர் பலகை மற்றும் சிவப்பு - நீல சுழல் விளக்கு பயன்படுத்தியது, ஐ.ஏ.எஸ்., பணியில் சேர்ந்தபோது, உடல் ரீதியான குறைபாடு மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான சான்றிதழ்களை முறைகேடாக சமர்ப்பித்தது என அடுத்தடுத்து புகார்களில் சிக்கினார். இதனையடுத்து அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஐ.ஏ.எஸ்., தேர்ச்சியும் ரத்து செய்யப்பட்டது.


இது தொடர்பாக யு.பி.எஸ்.சி., அளித்த புகாரின்படி டில்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு பூஜா கேத்கர் டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அவர் முறையிட்டார். வழக்கு பி.வி.நாகரத்னா, சதீஷ் சந்திர சர்மா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.




இதனை விசாரித்த நீதிபதி நாகரத்னா கூறியதாவது: விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் என்பதற்கு என்ன அர்த்தம்? அவர் கொலை குற்றத்தில் ஈடுபடவில்லை. போதைப்பொருள் தடுப்பு சட்டம் அல்ல. அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவார் எனத் தெரிவித்தார்.


இதனைத் தொடர்ந்து, அவர் ஒன்றும் கொலை செய்யவில்லை எனக்கூறி முன்ஜாமின் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement