குழாய் பதிப்பு பணியில் அலட்சியம் மீண்டும் தடம் புரண்டது அரசு பஸ்

ஆர்.கே.பேட்டை:திருத்தணியில் இருந்து வங்கனுார் வழியாக வீரமங்கலத்திற்கு, தடம் எண்: 65 என்ற அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. வங்கனுாருக்கு 35 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வரும் ஒரே பேருந்து இது மட்டுமே.

நேற்று மாலை திருத்தணியில் இருந்து வங்கனுாருக்கு இப்பேருந்து சென்று கொண்டிருந்தது. வங்கனுார் பேருந்து நிலையம் அருகே, வளைவில் திரும்பும் போது, சாலையோரம் மண் சாலையில் இறங்கியது.

சமீபத்தில், அந்த பகுதியில் குழாய் பதிப்பு பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதனால், மண் சாலை இலகுவாக இருந்துள்ளது. இதில், பேருந்தின் சக்கரம் புதைந்தது. இதனால், பயணியர் அலறியடித்து பேருந்தில் இருந்து இறங்கி ஓடினர்.

பின், ஓட்டுநர், பொறுமையாக பேருந்தை பின்னோக்கி இயக்கி, பள்ளத்தில் இருந்து மீட்டார். ஆறு மாதங்களுக்கு முன், இதே பகுதியில் தடம் எண்: 65 என்ற அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் சிக்கியதும், பின் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் மீட்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement