முதல்வரின் உறவினர் ஆகாஷ் தலைமறைவு; தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயனுக்கு சிக்கல்

சென்னை: சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் சிக்கியுள்ள, முதல்வர் ஸ்டாலின் நெருங்கிய உறவினர் ஆகாஷ் பாஸ்கரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், அவரிடம் பணம் பெற்ற நடிகர்கள் சிம்பு, தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் பாஸ்கரன்; தொழில் அதிபர். இவரது மகன் ஆகாஷ் பாஸ்கரன். சினிமாவில் இயக்குநராகி சாதிக்க வேண்டும் என்ற கனவுடன், 2015ல், சென்னை வந்த இவர், விஜய் சேதுபதி நடித்த 'நானும் ரவுடி தான்' என்ற படத்தில் உதவி இயக்குநராக வேலை பார்த்துள்ளார்.
இவர், 2024ல், முதல்வர் குடும்பத்தை சேர்ந்த மு.க.முத்து மகள் வழி பேத்தியான தாரணியை திருமணம் செய்தார். 'கவின்கேர்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.கே.ரங்கநாதன் தான் தாரணியின் தந்தை.
திருமணத்திற்கு பின், ஆகாஷ் பாஸ்கரனின் அபார வளர்ச்சி தமிழ் சினிமா வட்டாரங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஒரு கட்டத்தில், கோடிகள் முதலீடு செய்து, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் படங்களை தயாரித்தார். அதர்வா நடிப்பில், 'இதயம் முரளி' என்ற படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார்.
இந்நிலையில், சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில், ஆகாஷ் ஈடுபடுவதாக, அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், கடந்த, 16,17 ம் தேதிகளில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள, ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது கைப்பற்றிய ஆவணங்களை ஆய்வு செய்ததில், நடிகர்கள் தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோருக்கு சம்பளமாக, 80 கோடி ரூபாய் கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேற்று ஆஜராக வேண்டும் என, 'சம்மன்' அனுப்பி இருந்தனர். ஆனால், ஆகாஷ் பாஸ்கரன் ஆஜராகவில்லை. நடிகர்களுக்கு பரிமாற்றம் செய்துள்ள பணம் தொடர்பாக, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோரிடமும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதில், சினிமா பி.ஆர்.ஓ.,க்கள் இரண்டு பேரையும், விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
டாஸ்மாக் அதிகாரிகள் ஆஜர்
இதற்கிடையே, டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் மொத்த விற்பனை பிரிவு பொது மேலாளர் சங்கீதா மற்றும் கொள்முதல் மற்றும் விற்பனை பிரிவு துணை பொது மேலாளர் ஜோதி சங்கர் ஆகியோர், நேற்று அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.
இருவரிடமும், மதுபானங்கள் கொள்முதல், விற்பனை மற்றும் பார் டெண்டர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து, மூன்று மணி நேரம் விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.





மேலும்
-
டில்லியில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் இருவர் கைது; திஹார் சிறையில் அடைப்பு!
-
மத்திய அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; வானிலை மையம் தகவல்!
-
சென்னை புகார் பெட்டி
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்தை நெருங்கியது!
-
இரண்டு கவுன்டர்களில் மட்டுமே மாத்திரை அமைச்சர் உத்தரவிட்டும் தொடரும் அவலம்
-
காட்டு யானை தாக்கி மூதாட்டி பலி