மலைக்கோட்டை அருகே கிறிஸ்தவ நுழைவுவாயில் அமைக்க தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

21

மதுரை: திண்டுக்கல் மலைக்கோட்டை அருகே கிறிஸ்தவ அலங்கார நுழைவுவாயில் அமைக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.


திண்டுக்கல் செந்தில்வேலு தாக்கல் செய்த பொதுநல மனு:

திண்டுக்கல் மலைக்கோட்டை சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்தது. மதுரை நாயக்கர் வம்ச ஆட்சியில் கட்டப்பட்டது. மத்திய தொல்லியல்துறையின் பராமரிப்பில் உள்ளது.அங்கு பழமையான கோயில்கள் உள்ளன.


மலைக்கோட்டை மற்றும் மலை உச்சியிலுள்ள குளத்தில் ஆக்கிரமிப்புகள்உள்ளன. குளத்தை மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் துாய்மையாக பராமரிக்கவில்லை. குப்பை தேங்கியுள்ளது. இதனால் அதிலுள்ள நீரை மக்கள் பயன்படுத்த முடியவில்லை.


மலைக்கோட்டை அருகே கிறிஸ்தவ அலங்கார நுழைவு வாயில் அமைக்க மாநகராட்சி முயற்சிக்கிறது. இதனால் இதர மதங்களை சார்ந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். நுழைவுவாயில் அமைக்க தடை விதிக்க வேண்டும்.


மலைக்கோட்டையை சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். குளத்தை துார்வார வேண்டும். மலையிலுள்ள கோயிலில் வழிபாடு நடத்த அனுமதிக்க கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், தொல்லியல்துறை கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.


நீதிபதிகள் எஸ்.ஸ்ரீமதி, ஆர்.விஜயகுமார் அமர்வு: மறு உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை கிறிஸ்தவ அலங்கார நுழைவுவாயில் அமைக்கக்கூடாது. கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் 4 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டது.

Advertisement