போதையில் விபத்து ஏற்படுத்திய ஏட்டு தீக்குளித்து தற்கொலை

சென்னை, நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர் செந்தில், 45. மனைவி மற்றும் ஒரு ஆண், ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

செந்தில், ஆலந்துார் காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கி, தரமணி காவல் நிலையத்தில், ஏட்டாக பணி புரிந்தார்.

இவர், நேற்று முன்தினம் இரவு, வேளச்சேரியில் இருந்து கிண்டி நோக்கி, காரில் புறப்பட்டார். மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

மடுவாங்கரை மேம்பாலத்தில் ஏறியபோது, ஈக்காட்டுத்தாங்கலை சேர்ந்த முருகேசன், 52, என்பவர் வந்த பைக் மீது, கார் மோதியது.

இதில் நிலைதடுமாறி பாலத்தில் இருந்து கீழே விழுந்த முருகேசன், பலத்த காயமடைந்தார். அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ராயப்பேட்டை மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகிறார்.

நிற்காமல் சென்ற காரை பின்தொடர்ந்து சென்ற சக வாகன ஓட்டிகள், செந்திலை மடக்கி பிடித்து, கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார், செந்தில் மீது வழக்குப்பதிவு செய்து, காரை பறிமுதல் செய்தனர். போதையில் இருந்ததால், அவரிடம் எழுதி வாங்கிவிட்டு, காலையில் வரக் கூறினர்.

இந்நிலையில், இவர் விபத்து ஏற்படுத்திய சம்பவம் தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது.

மேலும், துறைரீதியான நடவடிக்கை எடுக்க இருப்பதாக வந்த தகவலால் மனமுடைந்த செந்தில், நேற்று தரமணி, மேம்பால ரயில் நிலையம் அருகே, உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

தரமணி போலீசார், அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

Advertisement