2வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றம் அனகாபுத்துாரில் பெண்கள் எதிர்ப்பு

அனகாபுத்துார்,அனகாபுத்துாரில், அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள டோபிகானா, தாய் மூகாம்பிகை, சாந்தி, காயிதே மில்லத், ஸ்டாலின், எம்.ஜி.ஆர்., நகர் பகுதிகளில், ஆற்றை ஆக்கிரமித்து, 700 குடியிருப்புகள், கடைகள் கட்டப்பட்டுள்ளன.

கடந்த 2023ல், 20 கடைகள், 90க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டு, ஆக்கிரமிப்பாளர்களுக்கு, தாம்பரம் - கிஷ்கிந்தா சாலையில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டன.

எஞ்சிய ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றும் பணி, நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாளில், காலி செய்ய தானாக முன் வந்தோருக்கு மாற்று வீடுகள் ஒதுக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகள் இடிக்கப்பட்டன.

தொடர்ந்து, இரண்டாவது நாளாக, ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணி, நேற்றும் நடந்தது. அப்போது, போலீஸ் பாதுகாப்புடன், பொக்லைன் இயந்திடங்கள் வாயிலாக, வீடுகள் இடிக்கப்பட்டன.

அப்போது, இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண்கள் வீடுகள் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

சில பெண்கள், வீடுகள் இடிப்பதை பார்த்து மயக்கமடைந்தனர். பலர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனாலும், ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடக்கிறது.

சம்பவ இடத்திற்கு சென்ற, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆக்கிரமிப்பாளர்களை சந்தித்து பேசினார்.

Advertisement