கோவையில் கொரோனா பாதிப்பு இல்லை  சுகாதாரத்துறை தகவல்

கோவை, ; கொரோனா பாதிப்புகள் ஏதும் பதிவாகவில்லை. விமானநிலையங்களில் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு வருகிறோம் என, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுசாமி தெரிவித்தார்.

தமிழகத்தில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பெரிய பாதிப்புகள் இல்லை எனினும், மாநில சுகாதாரத்துறை, மாவட்ட அளவில் அலர்ட்டாக இருக்க அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது. அதன்படி, பாதிப்புகள் அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வந்தவர்கள், அவர்களது வீடுகள், சுற்றுவட்டார பகுதிகளில் கண்காணிப்புகளை வழக்கம் போல் மேற்கொள்கின்றனர்.

டீன் நிர்மலா கூறுகையில், ''போலியோ போன்று கொரோனா முற்றிலும் ஒழிக்கப்படவில்லை. கொரோனா பாதிப்பு ஒன்று, இரண்டு பேருக்கு வருவதை தவிர்க்க முடியாது. கோவை அரசு மருத்துவமனையில் இதுவரை கொரோனா பாதிப்புகள் பதிவாகவில்லை. அவசியம் ஏற்படின் அனைத்து வசதிகளும் தயார்நிலையில் உள்ளதால், பதட்டம் கொள்ள தேவையில்லை. பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை, '' என்றார்.

மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுசாமி கூறுகையில், ''விமானநிலையங்களில் சர்வதேச விமானங்களில் வருபவர்களை, சுகாதாரத்துறை பணியாளர்கள், தெர்மல் ஸ்கிரீனிங் வாயிலாக கண்காணிக்கின்றனர்.

காய்ச்சல் போன்ற அறிகுறி இருப்பின் தனிமைப்படுத்தப்படுவார்கள். கோவையில் இதுபோன்ற பாதிப்புகள் ஏதும் இல்லை. பொதுமக்கள் அச்சம், பதட்டம் அடைய வேண்டியதில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து யாரேனும் வந்தாலும் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள்,'' என்றார்.

Advertisement