விளையாட்டு மைதானமாக மாறிய ஏரி மழைநீர் சேமிக்க என்ன திட்டம் ஆபீசர்ஸ்? கரைந்து வரும் கரைகளால் விவசாயிகள் கவலை

பொன்னேரி:பழவேற்காடு அடுத்த தாங்கல்பெரும்புலம் கிராமத்தில், 300 ஏக்கர் பரப்பளவில் பாசன ஏரி அமைந்துள்ளது. ஏரியை நம்பி, 250 ஏக்கர் பரப்பளவில் ஆண்டுக்கு ஒரு முறை சம்பா பருவத்தில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது.

இந்த ஏரியின் நீர்வரத்து கால்வாய்கள் உரிய முறையில் பராமரிக்கப்படாததால், மழைக்காலங்களில் முழு கொள்ளளவிற்கு மழைநீர் தேங்குவதில்லை. இதனால், ஆண்டுதோறும் கோடைக்கு முன்பே ஏரி வறண்டு விடுகிறது.

இந்த ஆண்டும் ஏரி வறண்டு, கிரிக்கெட் மைதானமாக மாறியுள்ளது. மேலும், ஏரியின் கரைகள் சேதமடைந்தும், செடிகள், கொடிகள் வளர்ந்து பராமரிப்பு இன்றி உள்ளது. இந்த ஏரியை துார்வாரி, மழைநீரை சேமித்து வைத்தால், பயனுள்ளதாக இருக்கும் என, கிராமவாசிகள் மற்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

தாங்கல் பெரும்புலம் ஏரிக்கு அருகில், ஆரணி ஆறு பயணிக்கிறது. ஆண்டுதோறும், 12 - 15 டி.எம்.சி., மழைநீர், ஆரணி ஆற்றின் வழியாக பழவேற்காடு கடலில் கலக்கிறது. இந்த ஆற்று பகுதியில் இருந்து, தாங்கல் பெரும்புலத்திற்கு மழைநீர் கொண்டு வந்து சேமிக்கலாம்.

தற்போது, மழைநீரை சேமிப்பதற்கான திட்டமிடல் அவசியமானது. எனவே, ஏரியின் கரைகளை சீரமைத்து, நீர்வரத்து கால்வாய்களை தூர்வார, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement