ஒகேனக்கல் நீர்வரத்து 14,000 கன அடியாக அதிகரிப்பு

'
ஒகேனக்கல் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு, 14,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழை, தமிழக நீர்பிடிப்பு பகுதிகளான, நாட்றாம்பாளையம், அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, பிலிகுண்டுலு, ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழையால், காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 8,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 4:30 மணிக்கு வினாடிக்கு, 14,000 கன அடியாக அதிகரித்தது.


இதனால், மெயின் அருவி, சினி பால்ஸ், மெயின் பால்ஸ், ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால், ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள், அருவிகளை கண்டு ரசித்தும், காவிரியாற்றில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் மகிழ்ந்தனர். நேற்று, பரிசல்கள் ஐந்தருவிக்கு செல்லாமல், மணல் திட்டு வரை மட்டுமே இயக்கப்பட்டது. நீர்வரத்து அதிகரிப்பால், ஒகேனக்கல் காவிரியாற்றில் வரும் அதிகளவு மீன்களை மீனவர்கள் பிடித்து வருகின்றனர்.

Advertisement