2024-25ம் நிதியாண்டில் ரூ. 2,714 கோடி நிகர லாபம் ஈட்டி என்.எல்.சி., சாதனை

நெய்வேலி:என்.எல்.சி., இந்தியா நிறுவனம் கடந்த 2024 - 25 ம் நிதியாண்டில் 2ஆயிரத்து 714 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டி புதிய சாதனை படைத்துள்ளது.

என்.எல்.சி.,யில் கடந்த மார்ச் 31 ம் தேதியுடன் முடிவடைந்த கடந்த நிதியாண்டிற்கான நிதி நிலை முடிவுகள், அந்நிறுவனத்தின் சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி தலைமையில் நடந்த இயக்குநர்கள் குழுக்கூட்டத்தில் வெளியிடப்பட்டன.

கடந்த நிதியாண்டில், 172.02 லட்சம் டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது. மொத்த மின் உற்பத்தி 27,865.58 மில்லியன் யூனிட்களாக உயர்ந்துள்ளது. இதில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் உற்பத்தியான 2094.33 மில்லியன் யூனிட்களும் அடங்கும்.

என்.எல்.சி., குழுமம் இதுவரை இல்லாத அளவில், அதிகபட்சமாக 7,700 கோடி ரூபாய்க்கு மேல் மூலதனச் செலவை அடைந்துள்ளது. நிதிநிலையை பொறுத்தவரை, 2024--25ம் நிதியாண்டில் 17.55 சதவிகித வளர்ச்சியுடன் 15,282.96 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டியுள்ளது. வட்டி, வரிகள், தேய்மானம், கடன் தவணை செலுத்துதல் ஆகிய செலவீனங்கள் கழிக்கப்படும் முன் உள்ள வருவாய் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 6,512.96 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

உ.பி.,யில் செயல்பட்டுவரும் என்.யு.பி.பி.எல்., 2024-25 நிதியாண்டின் நான்கு மாத காலகட்டத்தில் அதன் செயல்பாடுகள் மூலம் 700.50 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டியுள்ளது. என்.எல்.சி., நிறுவனம் முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டப்பட்ட 13,948.47 கோடி ரூபாய் மொத்த வருவாயுடன் ஒப்பிடும்போது, 2024-25 ம் நிதியாண்டில் மொத்த வருவாய், 21.08 சதவிகித வளர்ச்சியுடன் 16,889.45 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

2024-25ம் நிதியாண்டில் முன்னெப்போதையும் விட அதிகபட்ச வளர்ச்சியுடன் (28.29 சதவீதம் ) 3,696.93 கோடி ரூபாயை வரிக்கு முந்தைய லாபமாக ஈட்டியுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு வரிக்குப் பிந்தைய லாபமாக 2,713.61 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டி புதிய வரலாற்று சாதனையை என்.எல்.சி., பதிவு செய்துள்ளது.

Advertisement