விதிகளை பறக்க விட்ட குவாரி உரிமையாளரை காப்பாற்ற போராடிய அதிகாரிகள்

6

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே 5 பேர் பலியாக காரணமான கல் குவாரி மக்களின் எதிர்ப்பையும், விதிமுறைகளையும் மீறி அதிகாரிகளின் தயவுடன் ஆபத்தான மரணக்குழியாகவே செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.


சிவகங்கை மாவட்டம் மல்லாக்கோட்டையில் அதே ஊரைச் சேர்ந்த மேகவர்மன் என்பவர் நடத்தும் குவாரியில், மே 20ல் பள்ளத்தில் துளையிடும் பணியில் ஈடுபட்டிருந்த 5 தொழிலாளர்கள் பாறை சரிந்து பலியாகினர். ஒருவர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். எஸ்.எஸ்.கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


விபத்து நடந்த மேகா புளூ மெட்டல் குவாரி மல்லாக்கோட்டை கிராமத்தில் குடியிருப்பு பகுதியை ஒட்டி சில மீட்டர் துாரத்தில் இயங்கி வருகிறது. 13 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்ட இக்குவாரியில் ஆரம்பத்தில் கிராவல் மண்ணும், ஜல்லி கற்களும் வெட்டி எடுத்து விற்கப்பட்டது. கொரோனோ காலத்திற்கு பின் எம் சாண்டு, பி சாண்டு மணலுக்கு அதிக தேவை ஏற்பட்டதால் அதுவும் தயாரிக்கப்பட்டது.


இதற்காக குவாரி உள்ளே பல ஏக்கர் பரப்பில் 400 அடி ஆழத்திற்கும் மேலாக பாறை வெட்டி எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இக்குவாரியில் நடைபெறும் விதிமீறல், சுற்றுச்சூழல் பாதிப்பு, மக்களுக்கு ஏற்படும் இடையூறு குறித்து யார் புகார் தெரிவித்தாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. போலீசார் முதல் வருவாய்த்துறை, கனிமவளத்துறை அதிகாரிகள் வரை அனைவரும் குவாரி நிர்வாகத்துக்கே ஆதரவாக செயல்பட்டுள்ளனர்.


குவாரியில் இருந்து தினமும் நுாற்றுக்கணக்கான லாரிகளில் மண் கொண்டு செல்லப்படுவதால் மல்லாக்கோட்டை, ஜெயங்கொண்டநிலை உள்ளிட்ட கிராமங்களில் ரோட்டில் துாசி கடுமையாக படிகிறது. இத்துாசியால் பலர் நுரையீரல் பாதிக்கப்பட்டு, சுவாசக்கோளாறால் அவதிப்படுகின்றனர். விபத்து நடந்த தினத்தன்று அதிகாரிகள் குவாரி மீது நடவடிக்கை எடுப்பதை விட அவர்களை காப்பாற்றும் நோக்கத்திலேயே செயல்பட்டனர் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


செய்தி, படம் சேகரிக்க செய்தியாளர்களை கூட குவாரிக்குள் அனுமதிக்க போலீசார் முதலில் தடை விதித்திருந்தனர். அதே நேரம் குவாரி வாசலில் உயிர்களை பலிகொடுத்தவர்கள் அழுது புலம்பிக்கொண்டிருந்த போது உரிமையாளரின் உறவினர்கள் கார்களில் சாவகாசமாக உள்ளே சென்று வந்து கொண்டிருந்தனர்.


குவாரி உரிமையாளர் மேகவர்மன் அதே கிராமத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது உறவினர்கள் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்திலும் முக்கிய பொறுப்புகளில் இருக்கின்றனர். இதனால் புகார் கொடுப்பவர்கள் மறைமுகமாக மிரட்டலுக்கு ஆளாக்கப்பட்டு வந்துள்ளனர். குடியிருப்பை ஒட்டி இவ்வளவு ஆழத்தில், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அம்சங்கள் செய்யப்படாமல் கற்களை வெட்டி எடுக்க அதிகாரிகள் எவ்வாறு அனுமதித்தனர் என்பது சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.


அப்பாவி தொழிலாளர்கள் 5 பேர் பலியானதற்கு குவாரி நிர்வாகம் மட்டுமின்றி, விதிமீறல்களை கண்டுகொள்ளாத அதிகாரிகளும் காரணம் என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள். குவாரி நடத்த எந்த அடிப்படையில், எத்தனை மீட்டர் ஆழம் அனுமதி அளிக்கப்பட்டது, எத்தனை மீட்டர் ஆழம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு தாசில்தார், கனிமவளத்துறையினர் மழுப்பலாகவே பதிலளிக்கின்றனர்.

Advertisement