இறந்து பிறந்த குழந்தை டீன் விளக்கம்

நாகர்கோவில்:'' டாக்டர்கள் கூறிய அறிவுரையை கேட்காததால்தான் நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லுாரியில் கர்ப்பிணிக்கு பிரசவத்தின் போது குழந்தை இறந்ததாக'' டீன் தெரிவித்துள்ளார்

கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு தாமரைக்குளம் கீழத் தெரு சுரேஷ் மனைவி ராதிகா 19. நிறைமாத கர்ப்பிணியாக இருந்தவர் பிரசவத்துக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மே 19- ல் அனுமதிக்கப்பட்டார். குழந்தை இறந்த நிலையில் ஆப்பரேஷன் செய்து எடுக்கப்பட்டது. டாக்டர்களின் கவன குறைவால்தான் குழந்தை இறந்ததாக குற்றம் சாட்டி பா.ஜ., மற்றும் த. வெ.க. கட்சியினர் மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர். போலீசார் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

மருத்துவக்கல்லுாரி டீன் ராமலட்சுமி கூறியதாவது:

ராதிகா நிறைமாத கர்ப்பிணியாக மே 15 ல் இங்கு வந்தார். ரத்த அழுத்த நோய் மற்றும் கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். எனவே அவரை சிகிச்சைக்காக அன்றே மருத்துவமனையில் அனுமதிக்க டாக்டர்கள் அறிவுறுத்தினர். ஆனால் அக்கா சென்னையில் இருந்து வர வேண்டும் எனஅடுத்த நாள் வருவதாக கூறினார்கள்.

வீட்டுக்கு சென்றால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கு நாங்களே பொறுப்பு என்று கையெழுத்திட்டு சென்றனர்.

மே 19 காலை 11:00 மணிக்கு மருத்துவமனைக்கு அவர் வந்ததும் பரிசோதிக்கப்பட்டு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். குழந்தை ஏற்கனவே இறந்தது தெரிந்ததால் ஆப்பரேஷன் இல்லாமல் குழந்தையை வெளியே எடுக்க முயற்சி செய்யப்பட்டது. ஆனால் அவரை வலியை தாங்க முடியாததால் ஆப்பரேஷன் செய்து குழந்தை வெளியே எடுக்கப்பட்டது. குழந்தை இரண்டு நாட்கள் முன்பே இறந்ததாக அறியப்படுகிறது.

டாக்டர்கள் கூறும் நேரத்தில் கர்ப்பிணிகள் மருத்துவமனையில் சேர வேண்டும். அவ்வாறு செய்தால் இது போன்ற சம்பவங்களை தவிர்க்க முடியும் என்றார்.

Advertisement