200 பில்லியன் ஆண்டுகள் பழமையான தொல்லியல் பொருட்கள் கண்காட்சி பார்வையிட சுற்றுலா பயணிகள் ஆர்வம்

புதுச்சேரி: உலக அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு 200 மில்லியன் ஆண்டுகள் பழமையான படிமங்கள், தொல்லியல் பொருட்களை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.

உலக அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு தாகூர் அரசு கலைக்கல்லுாரி சார்பில், புதுச்சேரி ஒயிட் டவுன் செயின்ட் லுாயிஸ் வீதியில் உள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில், 'பழங்காலத்தை எதிர்காலத்தில் பார்த்தல்' என்ற தலைப்பில் ஒரு வாரத்திற்கு தொல்லியல் பொருட்கள் கண்காட்சி நடத்தி வருகிறது.

இதில் தாகூர் அரசு கல்லுாரி மாணவர்கள் தொல்லியல் ஆராய்ச்சியாளர் ரவிச்சந்திரன் தலைமையில் புதுச்சேரியில் சேகரிக்கப்பட்ட, 2,500 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த மனிதர்களை அடக்கம் செய்ய பயன்படுத்தப்பட்ட முதுமக்கள் தாழியின் உடைந்த பாகங்கள், மனித எலும்பு துண்டுகள், 800 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிமக்கள் பயன்படுத்திய இரும்பு கத்திகள், 200 மில்லியன் ஆண்டுகள் பழமையான படிமங்களாக கிடைத்த கடல் சங்கு, கிளிஞ்சல் உள்ளிட்ட தொல்லியல் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர். வரும் ஞாயிற்றுக்கிழமை வரை இக்கண்காட்சி நடக்கிறது.

Advertisement