கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை; 16 ஆண்டுகளில் இதுவே முதல்முறை!

1

திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. 16 ஆண்டுகளில் முதல்முறையாக, முன் கூட்டியே, தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெய்யத்தொடங்கி உள்ளது. கோவா, மஹாராஷ்டிரா, கர்நாடகாவில் இன்று மிக அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது.


கேரளாவில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த ஆண்டு நான்கு நாட்கள் முன்னதாகவே இந்த மழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்றே பருவமழை பெய்யத் தொடங்கி விட்டதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அதாவது, வழக்கமான ஜூன் 1ம் தேதிக்கு 8 நாட்கள் முன்னதாகவே மழை பெய்யத் தொடங்கி விட்டது. கடந்த 16 ஆண்டுகளில், முன் கூட்டியே, தென்மேற்கு பருவமழை தொடங்குவது இதுவே முதல் முறை.

வரும் நாட்களில் கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. மழை நாட்கள் குறைவாக இருக்கும் என்றும், மழைப்பொழிவு கூடுதலாக இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.



இன்று கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. இன்று முதல் பருவ மழை வலுக்கும் நிலையில் மே 25, 26 தேதிகளில் கேரளாவில் எல்லா மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் கேரளா, லட்சத்தீவு கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


அதேபோல், கோவா, மஹாராஷ்டிரா, கர்நாடகாவில் இன்று மிக அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Advertisement