புதிய நுாலக கட்டடம் கட்டப்படுமா?

சங்கராபுரம்: சங்கராபுரத்தில், கள்ளக்குறிச்சி சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே கிளை நுாலகம் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவர்கள் போட்டி தேர்வுக்கு படித்து பயனடைந்து வருகின்றனர். மேலும், ஏராளமானோர் வாசகர்களாக உள்ளனர்.

ஆனால், இந்நுாலகத்தில் அதிகமானோர் அமர்ந்து படிக்க போதிய இடவசதி இல்லை. இங்கு, 10 பேர் மட்டுமே அமரும் வகையில் இடம் உள்ளது.

அதுமட்டுமின்றி இடப்பற்றாக்குறையால் அதிகளவில் புத்தகங்கள் வைக்க முடியாமல் கட்டுகளாக கட்டி வைக்கப்பட்டுள்ளன.

இதனைத் தவிர்க்க, நுாலகத்திற்கு புதிய கட்டடம் கட்டும் வரை சங்கராபுரம் கடைவீதியில் ஏற்கனவே இயங்கி வந்த பெண்கள் அரசு மேல்நிலை பள்ளியில் நுாலகத்தை மாற்றி அமைக்கலாம் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்த பகுதியில் புதிதாக நுாலக கட்டடம் கட்ட மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கராபுரம் பொது சேவை அமைப்பின் தலைவர் முத்துகருப்பன், செயலாளர் குசேலன் மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் பிரசாந்த்திடம் மனு அளித்தனர்.

Advertisement