ஏட்டு சுரைக்காயான கன்னிவாடி நாயோடை பராமரிப்பு

கன்னிவாடி: மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் கன்னிவாடி அருகே நாயோடை நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. தோணிமலை, குட்டி கரடு மூங்கில் மலை, கரகத்து மலை, கோணமலை உள்ளிட்ட குன்றுகளை நீர் பிடிப்பு பகுதிகளாக கொண்டுள்ளது. வரத்து வாய்க்கால் உட்பட 90 ஏக்கர் நீர்ப்பிடிப்பு பகுதி உள்ளது.
கன்னிவாடி பேரூராட்சி, டி.புதுப்பட்டி, பண்ணைப்பட்டி ஊராட்சிகளுக்கு உட்பட 80க்கு மேற்பட்ட கிராமங்கள் பயன் அடையும் வகையில் மூன்று கிளைக்கால்வாய்களை கொண்டுள்ளது. இது தவிர குடாநாட்டில் இணையும் வழித்தடத்தில் 200க்கு மேற்பட்ட சிறு கண்மாய்களுக்கும் இதன் மறுகால் தண்ணீரே முக்கிய ஆதாரமாகும். கன்னிவாடி பேரூராட்சி மட்டுமின்றி சுற்று கிராமங்களுக்கான கூட்டுக்குடிநீர் திட்ட உறை கிணறுகளும் இதன் கரைப்பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளன. பொதுப்பணித்துறை வசம் உள்ள இந்த நீர்த் தேக்கத்தின் மேம்பாடு பராமரிப்பில் கடும் தொய்வு நிலவுகிறது. அதிகாரிகள் கண்டு கொள்ளாத நிலையில் நீர்தேங்கும் பகுதியில் ஆக்கிரமிப்பு விவசாயம், மணல் திருட்டு, துார்ந்து போன கிளை வாய்க்கால்கள் என பிரச்னைகள் ஏராளம். பெயரளவில் மட்டுமே பராமரிப்பில் உள்ள இந்த நீர்த்தேக்கங்கள் நிலத்தடி நீர் மட்ட உயர்வு, இப்பகுதி விவசாயிகளுக்கு எட்டாக்கனியாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் இப்பகுதியின் நிலத்தடி நீராதாரத்தை பாதுகாக்கும் வகையில் மேம்பாட்டு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.
அதிகாரிகள் அலட்சியம்
கே.சக்திவேல், மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர், ரெட்டியார்சத்திரம் : சுற்றுப்புறத்தில் 25 கிலோ மீட்டருக்கு நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில் நாயோடை நீர் தேக்கம் அமைக்கப்பட்டது. 23 ஆண்டுகளுக்கு முன் கட்டுமான பணிகள் துவங்கியது. பணி முடிந்து 15 ஆண்டுகளாகியும் முழுமையாக தண்ணீர் தேங்கி நிற்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனை பராமரிப்பதில் பொதுப்பணித்துறையினர் அலட்சியம் காட்டி வருகின்றனர். ஷட்டர் பழுது அணையின் பராமரிப்பு என ஏதேனும் காரணத்தை கூறி தண்ணீர் நிற்க முடியாத சூழலில் வெளியேற்றப்படுகிறது.சொற்ப அளவு தண்ணீர் மட்டுமே தேங்கும் நிலையில் கசிவு நீராக ஓடை வழியே வெளியேறுவது தொடர்கிறது.
துார்ந்த வாய்க்கால்கள்
பரமசிவம் ,விவசாயி, கன்னிவாடி :கன்னிவாடி பேரூராட்சி மட்டுமின்றி தெத்துப்பட்டி, டி.புதுப்பட்டி, குய்யவநாயக்கன்பட்டி, மணியகரன்பட்டி, சொக்கலிங்கபுரம், மாங்கரை, கோனூர், கசவனம்பட்டி பகுதிகளுக்கான, குடிநீர் விநியோக திட்டங்களும் இங்கிருந்து செயல்படுத்தப்படுகிறது. இதனை ஒட்டியுள்ள பேபி அணை பகுதியும் கண்டுகொள்ளப்படாமல் நீர்த்தேக்கம் பெயரளவில் மட்டுமே உள்ளது. குடிமராமத்து உள்ளிட்ட திட்டங்களில் பராமரிப்பு என்ற பெயரில் பெருமளவில் முறைகேடுகள் தொடர்கின்றன. நீர்த்தேக்கம் வரத்து வாய்க்கால் பகுதி ஆக்கிரமிப்புகளால் குறுகியுள்ளது.
பராமரிப்பு இல்லை
வீரப்பன்,விவசாயி, கன்னிவாடி : நீர் தேக்கத்தின் கரை பகுதிகள் முழுமையாக சேதமடைந்த நிலையில் உள்ளது. இருபுறமும் முள், புதர் செடிகள் அடர்ந்துள்ளன. டூவீலர்களில் கூட கரைப்பகுதியில் பயணிக்க முடியவில்லை. பெயரளவில் கரைப்பகுதியில் தார் ரோடு அமைத்துள்ளனர். விரிசல்களுடன், பாதசாரிகள் கூட நடந்து செல்ல முடியாத அளவிற்கு ரோடு சேதமடைந்துள்ளது. ஷட்டர்கள் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து வரும் மழைநீர், மதகு, ஷட்டர் வழியே கசிந்து வெளியேறுகிறது.--
மேலும்
-
வைகாசி சதய விழாவில் திருக்கல்யாண வைபவம்
-
சிவகங்கை கிரஷர் குவாரி விபத்து; பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு
-
அமெரிக்காவுடன் மோதலா? இல்லை என்கிறார் இஸ்ரேல் பிரதமர்
-
நான் தான் செய்தேன்: மீண்டும் வர்த்தகத்தை மேற்கோள் காட்டி டிரம்ப் பேச்சு!
-
தமிழகம், புதுச்சேரியில் 27 வரை மிதமான மழை
-
கைதிகளிடம் ஜாதி கேட்கக்கூடாது என்ற உத்தரவு சாதகமா, பாதகமா? சிறை காவலர்கள் சொல்வது என்ன