ரூ.15 லட்சம் கோடியில் 'கோல்டன் டோம்' அமெரிக்க வான் பாதுகாப்புக்கு டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: எதிரிகளின் ஏவுகணை தாக்குதல்களில் இருந்து அமெரிக்காவின் வான்வெளியை பாதுகாக்கும் விதமாக, 15 லட்சம் கோடி ரூபாய் செலவில் 'கோல்டன் டோம்' என்ற அதி நவீன வான் பாதுகாப்பு திட்டத்தை அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நேற்று அவர் கூறுகையில், “அமெரிக்காவை பாதுகாக்கும் வகையில் 15 லட்சம் கோடி ரூபாயில் 'கோல்டன் டோம்' திட்டம் செயல்படுத்தப்படும். எதிரிகள் அனைவரும் வானிலேயே துாக்கி எறியப்படுவர்; இதன் வெற்றி 100 சதவீதம் உறுதி.
“இந்த திட்டத்தால் அலாஸ்கா, புளோரிடா, ஜியார்ஜியா, இண்டியானா மாகாணங்கள் பெரிதும் பலனடையும். கனடாவும், இந்த திட்டத்தில் பங்கெடுக்க ஆர்வம் காட்டுகிறது,” என்றார்.
ஆனால், கனடா பிரதமர் மார்க் கார்னியின் அலுவலகத்தில் இருந்து இது தொடர்பாக எந்த கருத்தும் வெளியாகவில்லை.
இதற்கிடையே, அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன், 'கோல்டன் டோம்' அமைப்புக்கான ஏவுகணைகள், சென்சார்கள், செயற்கைகோள்கள், ரேடார்கள் போன்றவற்றை பரிசோதித்து வாங்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது.
அதே நேரத்தில், திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் பெறுவது உட்பட ஏராளமான சவால்கள், டிரம்புக்கு காத்திருக்கிறது.
எலன் மஸ்கின், 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம், ஒப்பந்த ரேஸில் முன்னணியில் இருக்கிறது. எனினும் எத்தனை சவால்கள், தடைகள் வந்தாலும், 'கோல்டன் டோம்' அமைப்பை தன் பதவி காலத்துக்குள், அதாவது 2029 ஜனவரிக்குள், முழுமையாக செயல் வடிவத்துக்கு கொண்டு வர, அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
