சித்தராமையாவிடம் மக்கள் கடும் வாக்குவாதம் சிவப்பு கம்பள வரவேற்பை ரத்து செய்த அதிகாரிகள்

பெங்களூரு: ஹொரமாவு சாய் லே - அவுட்டில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்ற முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாருடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்க தயாராக இருந்த மாநகராட்சி அதிகாரிகள் மீதும் கோபத்தை கொட்டி தீர்த்தனர்.
பெங்களூரில் கடந்த 17, 18 ம் தேதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால், ஹொரமாவு சாய் லே - அவுட் குடியிருப்பை வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்தை அனுபவித்தனர். இதுதவிர கோரமங்களா, பி.டி.எம்., லே - அவுட், ஹெச்.ஆர்.பி.ஆர். லே - அவுட், சில்க் போர்டு, எலக்ட்ரானிக் சிட்டி, பொம்மனஹள்ளி, எலஹங்கா உள்ளிட்ட பகுதிகளும் வெள்ளக்காடானது.
கடந்த 19ம் தேதி வெள்ள பாதிப்புகளை முதல்வர் சித்தராமையா ஆய்வு செய்வதாக இருந்தது. கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. நேற்று மதியம், விதான் சவுதாவில் இருந்து 'ஏசி' பஸ்சில் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள், அதிகாரிகள் வெள்ள பாதிப்பை பார்வையிட புறப்பட்டு சென்றனர்.
முதலில் ஹென்னுார், பாகலுார் பகுதிகளை ஆய்வு செய்தனர். வட்டரஹள்ளியில் ஆய்வை முடித்துவிட்டு, சாய் லே - அவுட் சென்றார். அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருந்த மக்கள், கோபத்தை கொட்டி தீர்த்தனர்.
மக்கள் கோபம்
'கடந்த, 10 ஆண்டுகளாக மழை நேரத்தில் பிரச்னை அனுபவித்து வருகிறோம். எங்களுக்கு நிரந்தர தீர்வு கிடையாதா. அதிகாரிகள் யாரும் வருவது இல்லை. நீங்கள் எங்களை சந்திப்பது இல்லை' என்று முதல்வர், துணை முதல்வரிடம் கோபத்தை வெளிப்படுத்தினர்.
கோபமாக இருந்த மக்களை, மாநகராட்சி தலைமை கமிஷனர் மகேஸ்வர ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் சமாதானம் செய்தனர். சாய் லே - அவுட்டிற்கு பின் பனத்துார், சில்க் போர்டு, குர்ரண்ணபாளையா, ஆர்.ஆர்.நகர், மஹாதேவபுராவில் ஆய்வு செய்த பின், இரவு 7:00 மணிக்கு மீண்டும் முதல்வர் விதான் சவுதா வந்தார்.
சுரங்கப்பாதை
பின், அவர் அளித்த பேட்டி: நகரில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்து உள்ளேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். சில இடங்களில் தாழ்வான பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் தண்ணீர் குடியிருப்புக்குள் புகுந்து உள்ளது.
சாக்கடை கால்வாயில் குப்பையை கொட்டுவதால் தண்ணீர் சீராக செல்ல முடியவில்லை. குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பனத்துார் ரயில்வே சுரங்க பாதை மிகவும் சிறியது. அந்த பாதையை அகலப்படுத்த வேண்டும்.
சில்க் போர்டு சந்திப்பில் நான்கு பக்கங்களில் இருந்தும் தண்ணீர் வருகிறது. இதனால் அங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த பிரச்னையை மெட்ரோ, மாநகராட்சி, நெடுஞ்சாலை அதிகாரிகள் ஒத்துழைப்புடன் தீர்க்க வேண்டும். மழையில் சேதம் அடைந்த வீடுகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்படும்.
அடுக்குமாடி குடியிருப்பில் தாழ்வான பகுதியில் பார்க்கிங் அமைக்க அனுமதிக்க வேண்டாம் என்று அதிகாரிகளிடம் கூறி உள்ளேன்.
சாக்கடை கால்வாயை ஆக்கிரமித்து கட்டி உள்ள கட்டடங்களை அகற்றவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு கூறினார்.
நோகடிக்காதீர்கள்
நகரில் நேற்று மழை பெய்யா விட்டாலும், வெள்ளம் வடிவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. மழைக்கு விழுந்த மரங்களை வெட்டி அகற்றும் பணிகள் நடக்கின்றன. சதாசிவநகர், ஓக்லிபுரத்தில் இரண்டு ராட்சத மரங்கள் நேற்று வேரோடு சாய்ந்தன.
ஹெச்.பி.ஆர்., லே - அவுட்டில் மழை வெள்ள பாதிப்புகளை முதல்வர் நேற்று ஆய்வு செய்தார்.
முன்னதாக அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் அருகே மேடை அமைத்து அதன் மீது சிவப்பு கம்பளத்தை மாநகராட்சி ஊழியர்கள் விரித்து வைத்து இருந்தனர். இதனை பார்த்து மக்கள் கடும் கோபம் அடைந்தனர்.
'முதல்வர் என்ன இங்கு சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்ளவா வருகிறார், நாங்கள் கஷ்டத்தில் இருக்கிறோம். எங்களை மேலும் நோகடிக்காதீர்கள்' என்று கோபத்தை வெளிப்படுத்தினர். சுதாரித்து கொண்ட மாநகராட்சி அதிகாரிகள் சிவப்பு கம்பளத்தை அகற்ற உத்தரவிட்டனர்.
சாய் லே - அவுட்டில் நேற்று கே.ஆர்.புரம் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ் ஆய்வு செய்ய சென்றார். அவரிடமும் மக்கள் வாக்குவாதம் செய்தனர். ''மழைக்காலம் துவங்குவதற்குள் உங்கள் பிரச்னையை தீர்க்க முயற்சிக்கிறேன். என்னால் முடியா விட்டால் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்கிறேன்,'' என்று பைரதி பசவராஜ் கூறினார்.
மேலும்
-
சிவகங்கை கிரஷர் குவாரி விபத்து; பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு
-
அமெரிக்காவுடன் மோதலா? இல்லை என்கிறார் இஸ்ரேல் பிரதமர்
-
நான் தான் செய்தேன்: மீண்டும் வர்த்தகத்தை மேற்கோள் காட்டி டிரம்ப் பேச்சு!
-
தமிழகம், புதுச்சேரியில் 27 வரை மிதமான மழை
-
கைதிகளிடம் ஜாதி கேட்கக்கூடாது என்ற உத்தரவு சாதகமா, பாதகமா? சிறை காவலர்கள் சொல்வது என்ன
-
மலைக்கோட்டை அருகே கிறிஸ்தவ நுழைவுவாயில் அமைக்க தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு