பெங்களூருவில் உள்ள நடன கிராமம்

-- நமது நிருபர் -

தொழிலதிபர் குடும்பத்தில் இரண்டாவது மகளாக பிறந்தவர் பிரதிமா கவுரி பேடி. கட்டுக்கோப்பான குடும்பத்தில் பிறந்த அவர், ஒரு மாடலாக மாறினார். நாடு முழுதும் பிரபலமானார்.

ஒரு நாள் பாறைகள் கண்காட்சிக்கு சென்றவர், மற்றொரு அரங்கில் ஒடிசா நடனத்தை பார்த்தார். சிறிது நேரம் பார்த்தவரின் கண்களில் கண்ணீர் தேங்கியது. நடனம் முடிந்ததும், குரு கேளுச்சரண் மகாபத்ராவிடம், தானும் ஒடிசி நடனம் கற்க விரும்புவதாக தெரிவித்தார்.

சிரித்த அவர், 'நான் கட்டாக் அடைவதற்கு முன், நீ கட்டாக் வந்து விட்டால், சிஷ்யையாக ஏற்றுக் கொள்கிறேன்' என்றார். இதை சவாலாக ஏற்றுக் கொண்ட பிரதிமா கவுரி, குருவுக்கு முன்னால், ஒடிசா சென்று அவரின் வீட்டு வாசலில் காத்திருந்தார்.

பூரிப்படைந்த குரு, அவருக்கு ஒடிசி நடனம் கற்றுக்கொடுத்தார். குறுகிய காலத்தில் ஒடிசி தேர்ச்சி பெற்றார். நாடு முழுதும் பல நடன நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார். அதேவேளையில், ஒடிசி நடனம் கற்க விரும்புவோருக்கு நடன பள்ளி அமைக்க முடிவு செய்திருந்தார்.

கர்நாடகாவுக்கு நடன நிகழ்ச்சிக்கு வந்த பிரதிமா கவுரி பேடி, பெங்களூரில் இருந்து 35 கி.மீ., தொலைவில் ஹெசர்கட்டா போஸ்ட் கோடிஹள்ளி கிராமத்தில் செம்மண் நிலத்தை கண்டார். இதை பார்த்ததும், ஒடிசி நடன பள்ளிக்கு ஏற்ற இடம் இது தான் என்பதை தீர்மானித்தார்.

இதற்காக, 1987ல் கர்நாடகாவில் அப்போதைய முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டேவிடம் பேசி, அரசு நிலத்தில், 'நிருத்யாகிராம்' எனும் நடன கிராமத்தை கட்டினார். தன் குருநாதர் கேளுச்சரண் மகாபத்ராவுக்காக கோவில் கட்டியுள்ளார். ஒடிசி நடனத்தில் ஆர்வம் உள்ள பலரும், இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர்.

வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை சுற்றி பார்க்கலாம். அனைத்து திங்கட்கிழமைகள், தேசிய, மாநில விடுமுறை நாட்களில் மூடப்பட்டிருக்கும்.

நடன கிராமத்தை சுற்றிப் பார்த்த பின், அதன் வரலாறு குறித்து உங்களுக்கு விளக்கம் அளிப்பர். 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும்; 75 வயதுக்கு மேற்பட்டோருக்கும் இலவசம். பெரியவர்களுக்கு 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நடனம் குறித்து தெரிந்து கொள்ள, வழிகாட்டியையும் பதிவு செய்து கொள்ளலாம்.

இவர் நடன கிராம வளாகத்தை 45 நிமிடங்கள் சுற்றிக் காண்பித்து, விளக்குவார். ஒரு பேட்சில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

சுற்றிப்பார்க்கவும், ஒடிசி நடனத்தை தனியாக பார்க்கவும் வசதி செய்யப்பட்டு உள்ளது. 45 நிமிடம் உங்களுக்கான ஒடிசி நடனம் நடக்கும். நடனம் முடிந்த பின், உங்கள் சந்தேகங்களுக்கு பதிலளிக்க, 15 நிமிடம் ஒதுக்கப்படும். இதிலும் குறைந்தபட்சம் 20 பேருக்கு மட்டுமே அனுமதி.

இந்த வசதிகளை பெற, முன் கூட்டியே நீங்கள், info@nrityagram.org என்ற இணையதளத்தில் சென்று முன்பதிவு செய்ய வேண்டும். நடனங்களை பார்க்க திறந்தவெளி, ஆம்பி தியேட்டரும் கட்டப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் இங்கு ஒடிசி நடனம் பயின்றவர்களின் நடனம் இடம் பெறும்.

மேலும் விபரங்களுக்கு 080 - 2846 6312 / 3 / 4 என்ற தொலைபேசியில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

22_Article_0001, 22_Article_0002, 22_Article_0003

தன் குருநாதர் கேளுச்சரண் மகாபத்ராவுக்காக, பிரதிபா கட்டிய கோவில். (அடுத்த படம்) ஒடிசி நடன பயிற்சியில் மாணவியர். (கடைசி படம்) சுற்றுலா வரும் பார்வையாளர்களுக்காக நடத்தப்பட்ட ஒடிசி நடனம்.படம்: பிரதிபா கவுரி



செல்வது?

பெங்களூரு சிட்டி மார்க்கெட் பஸ் நிலையத்தில் இருந்து 266 ஏ, 253 சி, 253 டி, 253 இ; மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து 253 ஜெ.,ல் ஏறி, ஹெசரகட்டா கிராமத்தில் இறங்கவும். அங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம். மெட்ரோ ரயிலில் செல்வோர், தாசரஹள்ளி மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து பஸ் எண்கள் 253 டி, 253 இ, 253 எப், 253 ஜெ., பஸ்சில் செல்லலாம்.

Advertisement