ஒரு பூத்தில் ஒரு நிர்வாகிக்கு 50-60 ஓட்டுகள் பொறுப்பு: அ.தி.மு.க., பலே திட்டம்

2

மதுரை: தமிழக சட்டசபை தேர்தலுக்கு 9 மாதங்களே உள்ள நிலையில், பூத் கமிட்டி அளவில் வலுவான கட்டமைப்பை அ.தி.மு.க., உருவாக்கி வருகிறது. ஒரு பூத்தில் ஒரு நிர்வாகி 50 முதல் 60 வாக்காளர்களுக்கு பொறுப்பேற்று ஓட்டளிக்கும் வரை அவர்களை கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


சட்டசபை தேர்தல்அடுத்தாண்டு நடக்கவுள்ளது. அ.தி.மு.க.,வில் பழனிசாமி அதிகாரப்பூர்வமாக பொதுச்செயலாளரான பிறகு நடக்கும் முதல் சட்டசபை தேர்தல்என்பதாலும், மீண்டும்ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதாலும் இப்போதே பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறார்.


பன்னீர்செல்வம், தினகரன் ஆதரவாளர்கள் என அ.தி.மு.க., ஓட்டுகள் பிரிந்து கிடக்கும் நிலையில், அ.தி.மு.க.,வுக்கென உள்ள ஓட்டுகளை தக்கவைக்கவும், புதியவர்களை சேர்க்கவும் பூத் கமிட்டிகளை பழனிசாமி அமைத்தார். மதுரைக்கு வளர்மதி, நெல்லைக்கு மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர் சரவணன், சென்னை பகுதிக்கு டாக்டர் மணிகண்டன் என கட்சியின் 82 மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்களை நியமித்தார்.


ஒரு தொகுதிக்கு குறைந்தபட்சம் 300 பூத்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பூத்திற்கும் 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தலா 50 முதல் 60 வாக்காளர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுஉள்ளது. அந்த வாக்காளர்கள் தேர்தலில் ஓட்டளிக்கும் வரை அவர்களுடன் பூத் கமிட்டியினர் தொடர்பில் இருப்பார்கள். பூத் கமிட்டியினர் புதிய உறுப்பினர்களையும் சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


டாக்டர் சரவணன் கூறுகையில், ''பொதுச்செயலாளர் உத்தரவுபடி தொடர்ந்து தமிழகம் முழுவதும் பூத் கமிட்டி கூட்டம் நடந்து வருகிறது. இதன் நிறைவுக்கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் மே 28,29ல் நடக்கிறது. பொறுப்பாளர்கள் மாவட்டங்களில் பூத் கமிட்டி அளவில் செய்த பணிகள் குறித்து விளக்குவர். அதை 4 பேர் கொண்ட கமிட்டி ஆய்வு செய்யும். அதன்அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பொதுச்செயலாளர் எங்களுக்கு அறிவுறுத்துவார்'' என்றார்.

Advertisement