சிபாரிசு இருந்தால் மட்டுமே கடன் தாட்கோ மீது மக்கள் குற்றச்சாட்டு
சென்னை:'அரசியல் பிரமுகர்களின் சிபாரிசுடன் செல்வோருக்கு மட்டுமே, தாட்கோ அதிகாரிகள் கடன் வழங்குகின்றனர். சிபாரிசின்றி செல்வோரை விரட்டி அடிக்கின்றனர்' என, கடன் பெற செல்வோர் குற்றம் சாட்டுகின்றனர்.
அலட்சியம்
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் எனப்படும், 'தாட்கோ' நிறுவனம் சார்பில், பட்டியல் மற்றும் பழங்குடியின மக்கள், பொருளாதார ரீதியாக மேம்பாடு அடையும் வகையில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
பொதுவாக, தாட்கோவில் கடன் பெற உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால், அதிகாரிகளின் அலட்சியம், இடைத்தரகர்களின் ஆதிக்கம், வங்கி ஊழியர்களின் மெத்தனம், அரசியல் ஆதரவு உள்ளிட்ட காரணங்களால், ஆண்டுதோறும் 60 சதவீதம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.
இதனால், பலரும் கடன் பெற முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர். இந்நிலையில், மாவட்டங்களில் செயல்படும், தாட்கோ அலுவலகங்களில் கடன் பெற, ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஆளுங்கட்சியினரின் சிபாரிசு இருந்தால் மட்டுமே கடன் வழங்கப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறியதாவது:
தற்போதுள்ள சூழலில், பலரும் சுயதொழில் செய்வதில், அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். வேலுார் மாவட்டத்தில் உள்ள மாவட்ட கூட்டுறவு வங்கியில் கடன் பெற கடந்த மாதம் விண்ணப்பிக்க சென்ற போது, தாட்கோவில் கடன் பெற விண்ணப்பிக்குமாறு வங்கி அதிகாரிகள் கூறினர்.
அதன்படி, மாவட்ட தாட்கோ அலுவலகத்தில் கடன் பெற, நானும், என் இரு நண்பர்களும் விண்ணப்பித்தோம். மூன்று விண்ணப்பங்களில், என் விண்ணப்பம் மட்டுமே நிராகரிக்கப்பட்டது; அவர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.
ஆதிக்கம்
இதுகுறித்து, நண்பர்களிடம் கேட்ட போது, ஊராட்சி தலைவர் அல்லது அரசியல் பிரமுகரின் ஆதரவு இருந்தால் எளிதில் கடன் பெறலாம் என்றனர்.
சிபாரிசின் அடிப்படையில் மட்டுமே கடன் வழங்கப்படும் எனில், அரசு எதற்கு இதுபோன்ற நிறுவனத்தை நடத்த வேண்டும்.
தென்காசி, சுரண்டை பகுதியிலும், இடைத்தரர்களின் ஆதிக்கம் அதிகம் என, அங்குள்ள என் உறவினர்களும் தெரிவித்தனர். இந்த பிரச்னைக்கு அரசு உரிய தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.