'கழிவுநீரை பொது இடங்களில் விடாதீர்' வாகன உரிமையாளர்களுக்கு அறிவுரை


ஈரோடு, கழிவுநீரை பொது இடங்களில் விடக்கூடாது என்று, கழிவு நீர் அகற்றும் வாகன உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

மாநகராட்சியால் உரிமம் பெற்ற, 21 கழிவு நீர் வாகன உரிமையாளர் மற்றும் பணியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம், மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) தனலட்சுமி தலைமையில் நேற்று நடந்தது.

மாநகர நல அலுவலர் கார்த்திகேயன், சுகாதார அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். குடியிருப்பு, பிற வளாகங்களில் எடுக்கப்படும் கழிவுநீரை, மாநகராட்சி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மட்டுமே வெளியேற்ற வேண்டும். பொது இடங்களில் வெளியேற்றுவது கண்டறியப்பட்டால், வாகன உரிமம் ரத்து செய்யப்பட்டு, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். எக்காரணம் கொண்டும் கழிவுநீர் தொட்டிக்குள் பணியாளர்கள் இறங்கக்கூடாது.
உரிய பாதுகாப்புடன் செயல்பட வேண்டும். குடியிருப்புகளுக்கு கழிவு நீர் அகற்ற செல்லும் முன், மாநகராட்சி தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவித்த பின்னரே செல்ல வேண்டும். மாநகராட்சி கழிவு நீர் சேகரிப்பு நிலையத்தில் காலை, 6:00 முதல் மாலை, 6:00 மணி வரை மட்டுமே வெளியேற்ற வேண்டும். மாநகராட்சியால் உரிமம் பெறப்படாத கழிவு நீர் வாகனங்கள் தென்பட்டால், மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

Advertisement