கோவில்கள் மறக்கப்பட வேண்டிய இடமல்ல; நினைவில் வைக்க வேண்டிய இடம்: கவர்னர்

1

சிவகங்கை: ''கோவில்கள் மறக்கப்பட வேண்டிய இடமல்ல, மக்கள் நினைவில் வைக்க வேண்டிய இடம்,'' என தமிழக கவர்னர் ரவி கூறினார்.


சிவகங்கை மாவட்டம் கண்டதேவியில், பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருத்தேரை நான்கு நாட்டார் சமூகத்தினர் இணைந்து இழுத்த நிகழ்வில் கலந்து கொண்டு கவர்னர் பேசியதாவது: இந்த விழா சமூக நல்லிணக்கத்துக்கு அடையாளம். நான்கு சமூகத்தினர் இணைந்து, 400 ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார்கள். இது ஆச்சரியமளிக்கும் நிகழ்வு.


ஆங்கிலேயர் ஆட்சியில் பிரித்தாளும் சூழ்ச்சியால் ஏற்பட்ட பிரிவுகள், சுதந்திரத்திற்கு பின்னரும் ஆட்சியாளர்களிடம் அதே கொள்கை நீடித்திருப்பது வருத்தம் தருகிறது. ஒற்றுமை ஏற்படுவதில் அரசின் பங்கு முக்கியமானது. இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில், “தமிழகத்தில் மற்ற எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு ஜாதி மற்றும் உப ஜாதிகள் உள்ளன. எனவே இந்த விழா 'திருத்தேர் ஓட்டமும், சமூக நல்லிணக்கமும்' என்ற பெயருடன் நடைபெறுவது மிகவும் பொருத்தமானது .


இந்த நாட்டில் இந்து தர்மத்தை கொரோனா கிருமி, டெங்கு, மலேரியாவோடு ஒப்பிட்டு பேசும் போக்கு உள்ளது, பக்தி அறிவியலுக்கு எதிரானது என கூறி, கோவில்களை ஒதுக்கி வைக்கும் செயலில் ஈடுபடுகின்றனர் . ஆனால் இந்த புனித மண்ணில் பக்தியின் வழி பரவியதே நம் அடையாளம். பக்தர்களை அறிவியலுக்கு எதிரானவர்கள் என சித்தரிப்பது தவறு. கோவில்கள் மறக்கப்பட வேண்டிய இடமல்ல, மக்கள் நினைவில் வைக்க வேண்டிய இடம்.

இத்தகைய சூழ்நிலையையும் தாண்டி, கள்ளர் மற்றும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் இடையிலான பல ஆண்டுகளாக இருந்த வேறுபாடுகளை மறந்து, திருத்தேர் விழாவை ஒற்றுமையோடு நடத்தியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இது தமிழகத்துக்கு மட்டும் அல்ல, இந்தியாவிற்கே ஒரு முன்னுதாரணமாக அமையட்டும். நல்லோர் இணைந்தால் சாத்தியமில்லாததும் சாத்தியமாகும் என்பதை இம்மண் நிரூபித்துள்ளது. இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.

பாரதத்தை கவனிக்கும் உலக நாடுகள்



சிவகங்கையில் நடந்த அபிவிருந்தி திட்ட துவக்க விழா, கோ பூஜை விழாவில் கவர்னர் ரவி பேசியதாவது:
பயங்கரவாதிகளை அனுப்பி அப்பாவி மக்களை பாகிஸ்தான் கொன்றது. நமது நாடு ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் சென்று பயங்கரவாதிகளை கொன்றோம். பதிலுக்கு அவர்கள் அனுப்பிய ட்ரோன்கள் எதுவும் நம்மை ஒன்றும் தாக்கவில்லை. நமது மண்ணை காத்த ராணுவ வீரர்களை நினைத்து நாட்டு மக்கள் பெருமை கொண்டனர்.

இன்றைய உலகம் பல பிரச்னைகளை சந்தித்து வருகிறது. பல போர்கள் நடக்கின்றன. பருவநிலை மாற்ற பிரச்னைகள் உள்ளன. மேற்கத்திய பாணியிலான வளர்ச்சி, ஒட்டு மொத்த உலகத்திற்கும் பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது.
பாரதம் வளரும் போது அனைத்து உலக நாடுகள் குறித்தும் கவனத்தில் கொள்ளும். தன்னை பற்றி மட்டும் சிந்திக்காது. ' யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற கொள்கையில் பாரதம் உறுதியாக உள்ளது.

2014ல் 11வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருந்தது. ஏழ்மை நாடாக இருந்தது. நம்மை உலக நாடுகள் மதிக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் 4வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறி உள்ளது. வேகமாக வளரும் பொருளாதாரமாக உள்ளது. மேற்கத்திய பாணியை கடைபிடிக்கவில்லை. மாற்று வழியை உலகத்திற்கு எடுத்துக்காட்டுகிறது.

பாரதம் பேசும் போது உலக நாடுகள் கவனிக்கின்றன. பாரதம் இல்லாமல் உலக நாடுகள் எந்த முடிவையும் எடுக்கவில்லை. வளர்ச்சி, மருத்துவம் உள்ளிட்டவற்றில் பாரதத்தை உலக நாடுகள் ஒரு புதிய எதிர்பார்ப்புடன் பார்க்கின்றன. பாரதத்திடம் இருந்து உலக நாடுகள் கற்றுக் கொள்கின்றன. இது புதிய பாரதம்.2047 ல் பாரதம் தன்னிறைவு பெற்ற நாடாகவும், வளர்ச்சி பெற்ற நாடாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு கவர்னர் பேசினார்.

Advertisement