ஐகோர்ட் நீதிபதிகளை வசை பாடுவதா? தி.மு.க.,வுக்கு கிருஷ்ணசாமி கண்டனம்

3

சென்னை : உயர் நீதிமன்ற நீதிபதிகளை தி.மு.க.,வினர் ஜாதி ரீதியாக வசை பாடுவதாக, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:



பல்கலை துணைவேந்தர்களை நியமிக்க, தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கிய சட்டப்பிரிவுக்கு தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் அமர்வு உத்தரவிட்டுள்ளது.



இத்தீர்ப்பை தாங்கிக்கொள்ள முடியாத தி.மு.க.,வினர், நீதிபதிகளின் படங்களை வெளியிட்டு, அவர்களை ஜாதி ரீதியாக வசை பாடியுள்ளனர்.



இது, தி.மு.க., மற்றும் அவர்களைச் சேர்ந்தவர்களின் வக்கிர புத்தியை காட்டுகிறது. இவர்கள் என்ன விரும்புகின்றனரோ, அதை அப்படியே எல்லா நீதிமன்றங்களும் தீர்ப்பு எழுதிட வேண்டும்.



இல்லையேல், அது 'பிராமண நீதிமன்றம்' என முத்திரை குத்துகின்றனர். இதை ஒரு உத்தியாக காலங்காலமாக பின்பற்றுகின்றனர். தி.மு.க.,வின் இந்த கலாசாரம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.



யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழுவிடம் நிதி பெற்றே, அனைத்து பல்கலைகளும் இயங்குகின்றன. மாநில அரசின் நிதி பங்களிப்பு என்பது மிக மிக குறைவு தான்.



எனவே, யு.ஜி.சி., மற்றும் கவர்னர் அனுமதியின்றி துணைவேந்தர்களை நியமனம் செய்ய, சட்டத்தில் வழியே இல்லை. இதெல்லாம் நன்கு தெரிந்தே, சட்டத்துக்கு விரோதமாக தி.மு.க., செயல்படுகிறது.



இதை சுட்டிக்காட்டுவோரை, ஜாதி வாயிலாக விமர்சிக்கின்றனர். இதை, தி.மு.க., உடனடியாக நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement