1.19 லட்சம் மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணம் வழங்கல் தினமலர் செய்தியால் தமிழக அரசு நடவடிக்கை

ராமநாதபுரம்:தமிழகத்தில் ஏப்.,15ல் மீன்பிடி தடைக்காலம் துவங்கி ஒரு மாதத்திற்கு மேலாகியும் அரசால் நிவாரணம் வழங்கப்படாததால் மீனவர்கள் பாதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதையடுத்து 1 லட்சத்து 19 ஆயிரம் பேருக்கு இந்நிவாரணம் வழங்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.

தமிழக கடலோர மாவட்டங்களில் மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்., 15 - ஜூன் 14 வரை மீன்பிடி தடைக்காலமாக அரசு அறிவித்தது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கடலுார், திருவாரூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சென்னை ஆகிய 14 மாவட்டங்களில் உள்ள 15 ஆயிரம் விசைப்படகுகள் மீன் பிடி தொழிலுக்கு செல்லாமல் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

மீனவர்கள் குடும்பம் தொழில் இல்லாமல் பாதிக்கப்படும் என்பதால் இத்தடைக்காலத்தில் நிவாரணத்தொகையாக தலா ரூ.8000 வழங்கப்படும்.

இந்நிலையில் ஏப்.,15ல் மீன்பிடி தடைக்காலம் துவங்கி ஒரு மாதமாகியும் இந்நிவாரணம் வழங்கப்படவில்லை.

இதனால் மீனவ குடும்பத்தினர் மிகவும் சிரமப்பட்டனர்.இதையடுத்து தமிழக அரசை கண்டித்து மீனவர்கள் கூட்டமைப்பினர் கஞ்சி தொட்டி திறக்கப்படும் என அறிவித்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்திகள் வெளியாயின.

இதன் எதிரொலியாக தமிழகம் முழுக்க மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையாக ரூ.8000 வழங்க அரசு ரூ.140.07 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. நேற்று முன்தினம் முதல் தலா ரூ.1500 வீதம் இருமுறையும், ரூ.5000 என நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement