'பென்'னுக்கு போட்டியாக 'மென்' தி.மு.க.,வுக்கு பதிலடி தர பா.ஜ., ஏற்பாடு

3



சென்னை: தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தெரிவிக்கும் விமர்சனத்துக்கு, உரிய ஆதாரங்களுடன் உடனுக்குடன் பதிலடி கொடுக்க, 'மென்' அதாவது, 'மீடியா எம்பவர்மென்ட் நெட்வொர்க்' அமைப்பை, தமிழக பா.ஜ., துவக்கி உள்ளது.

இதுகுறித்து, பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:



முதல்வர் ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமானது, 'பென்' என்று அழைக்கப்படும், 'பாப்புலஸ் எம்பவர்மென்ட் நெட்வொர்க்' அமைப்பு. இது, தேர்தல் வியூகம், ஊடக விவாதங்கள் போன்றவற்றில தி.மு.க.,வினர் எப்படி பேச வேண்டும் என்பது தொடர்பாக, அக்கட்சிக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.


தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள், மத்திய அரசு மற்றும் பா.ஜ., மீது தொடர்ந்து அவதுாறுகளை பரப்பி வருகின்றனர். அதற்கு உரிய ஆதாரங்களுடன் பதிலடி கொடுப்பதற்காக, தமிழக பா.ஜ., சார்பில், 'மென்' அதாவது, 'மீடியா எம்பவர்மென்ட் நெட்வொர்க்' அமைப்பு துவக்கப்பட்டுள்ளது.


இதில், ஐந்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இருப்பர் என்றும், தனி அலுவலகத்துடன் செயல்படும் என்றும் கூறப்படுகிறது.



'மென்' அமைப்பில் இருப்பவர்கள், பா.ஜ., சார்பில் ஊடக விவாதங்களில் பங்கேற்று பேசக்கூடியவர்களின் கருத்துகளையும், கட்சியினரின் சமூக வலைதளப் பதிவுகளையும் கண்காணிப்பர். அவர்கள் திறம்பட செயல்பட உதவி செய்வர்.


இதற்காக, தினமும் நடக்கும் நிகழ்வுகளின் அடிப்படையில், ஊடக விவாதங்கள் எந்த தலைப்பில் இருக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து, அதற்கு ஏற்ப விவாதங்களில், எதிரணியினர் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி தருவதற்கான ஆதாரங்கள், தகவல்களை திரட்டி வழங்குவர்.


இதன் வாயிலாக, அவதுாறு கருத்துகளுக்கு உரிய ஆதாரங்களுடன் உடனுக்குடன் பா.ஜ., தரப்பில் பதிலடி தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement