இங்கிலாந்து அணி ரன் குவிப்பு: டக்கெட், கிராலே, போப் சதம்

நாட்டிங்காம்: நாட்டிங்காம் டெஸ்டில் இங்கிலாந்தின் டக்கெட், கிராலே, போப் சதம் விளாசினர்.

இங்கிலாந்து சென்றுள்ள ஜிம்பாப்வே அணி, ஒரே ஒரு டெஸ்டில் பங்கேற்கிறது. இப்போட்டி நாட்டிங்காமில் நடக்கிறது. 'டாஸ்' வென்ற ஜிம்பாப்வே அணி 'பவுலிங்' தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணிக்கு ஜாக் கிராலே, பென் டக்கெட் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. இவர்களை பிரிக்க முடியாமல் ஜிம்பாப்வே பவுலர்கள் திணறினர். டெஸ்ட் அரங்கில் தனது 5வது சதத்தை பதிவு செய்தார் டக்கெட். முதல் விக்கெட்டுக்கு 231 ரன் சேர்த்த போது வெஸ்லி பந்தில் டக்கெட் (140) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய கிராலே, டெஸ்ட் அரங்கில் தனது 5வது சதம் அடித்தார். இவர், 124 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த போப், தன்பங்கிற்கு சதம் விளாச இங்கிலாந்து அணி 400 ரன்னுக்கு மேல் கடந்தது. ஜோ ரூட் 34 ரன்னில் அவுட்டானார்.

ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 498 ரன் எடுத்திருந்தது. போப் (169), புரூக் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement