விபத்தில் சிக்கிய விமானத்துக்கு அனுமதி மறுத்த பாகிஸ்தான்

புதுடில்லி : புதுடில்லியிலிருந்து ஸ்ரீநகருக்கு நேற்று முன்தினம் புறப்பட்ட இண்டிகோ விமானம், கடும் ஆலங்கட்டி மழை மற்றும் சூறாவளி காற்றால் நடுவானில் ஆட்டம் கண்டது.

இந்த விமானத்தில் பயணியர், ஊழியர்கள் என மொத்தம் 220 பேர் பயணித்தனர். விமானம் ஆட்டம் கண்டதால், அனைவரும் உயிர் பயத்துடன் இஷ்ட தெய்வங்களை வேண்டியபடி அமர்ந்திருந்தனர். அதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகின.


இந்த விமானத்தில் திரிணமுல் காங்கிரசின் டெரக் ஓ பிரைன், சஹாரிகா கோஷ் உட்பட ஐந்து திரிணமுல் எம்.பி.,க்களும் இருந்தனர்.


விமானம், அமிர்தசரஸ் வான் பரப்பில் பறந்த போது மோசமான வானிலையால் ஆட்டம் கண்டது. இதை தவிர்ப்பதற்காக, பாகிஸ்தான் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளரை விமானி தொடர்பு கொண்டு, அந்நாட்டு வான் பரப்பிற்குள் நுழைய அனுமதி கோரியுள்ளார். ஆனால், பாகிஸ்தான் அதற்கு அனுமதி மறுத்துள்ளது.


பஹல்காம் தாக்குதலுக்கு பின், இந்தியாவும்-பாகிஸ்தானும் மாறி மாறி தங்கள் வான்வழியை இரு நாட்டு விமானங்களுக்கும் மூடியுள்ளன.

Advertisement