துணிச்சலாக செயல்பட்ட வீரர்கள் 33 பேருக்கு வீரதீர விருது வழங்கி கவுரவிப்பு;விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி பெருமிதம்!

புதுடில்லி: துணிச்சலாக செயல்பட்ட வீரர்கள் 33 பேருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வீரதீர விருதுகளை வழங்கி கவுரவித்தார். " நாட்டை பாதுகாக்கும் வீரர்களின் வீரம் மற்றும் அர்ப்பணிப்புக்காக இந்தியா அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும்" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், 2025ம் ஆண்டுக்கான பாதுகாப்புத் துறை முதலீட்டு விழா நடந்தது. பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் மாநில மற்றும் யூனியன் பிரதேச போலீசார் நான்கு பேர் உட்பட மொத்தம் 33 பேருக்கு வீரதீர விருதுகள் வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு கவுரவித்தார்.
துணிச்சலாக செயல்பட்டதை பாராட்டும் வகையில், வீரதீர விருதுகள் வழங்கப்பட்டன. விருது பெற்ற ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். "பாதுகாப்பு படையினர் துணிச்சலாக செயல்பட்டதன் மூலம் பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஏராளமான வெடிப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன" என பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
வீரம், அர்ப்பணிப்பு!
இந்த விழாவில் பங்கேற்ற புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து பிரதமர் மோடி கூறி இருப்பதாவது: துணிச்சலான வீரர்களுக்கு வீர தீர விருதுகள் வழங்கப்பட்ட விழாவில் கலந்து கொண்டேன். நாட்டைப் பாதுகாப்பதில் நமது பாதுகாப்பு படையினரின் வீரம் மற்றும் அர்ப்பணிப்புக்காக இந்தியா எப்போதும் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
