நக்சல் பயங்கரவாதத்தின் முதுகெலும்பை முறித்துவிட்டோம்: சத்தீஸ்கர் முதல்வர் பெருமிதம்

3

ராய்ப்பூர்: '' ரூ.1 கோடி அறிவித்து தேடப்பட்ட நக்சல் இயக்க தலைவர் பசவராஜூ சுட்டுக் கொல்லப்பட்டதன் மூலம் நக்சல் பயங்கரவாதத்தின் முதுகெலும்பை முறித்துவிட்டோம்,'' என சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் கூறியுள்ளார்.


நக்சல் ஆதிக்கம் மிகுந்த சத்தீஸ்கர், தெலுங்கானா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில், ' ஆபரேஷன் பிளாக்பாரஸ்ட்' என்ற பெயரில், மத்திய மாநில அரசுகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, சத்தீஸ்கரில், நாராயண்பூர் மாவட்டத்தின் அபுஜ்மத் வனப்பகுதி அருகே நக்சல் படையினரை நோக்கி பாதுகாப்பு படையினர் சுட்டனர்.

இதில், தேடப்பட்டு வந்த நக்சல் அமைப்பின் மூத்த தலைவர் கேசவ ராவ் எனப்படும் பசவராஜூ உள்ளிட்ட 27 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில், பசவராஜ் பற்றி தகவல் தெரிவிப்போருக்கு ரூ.1 கோடி ரூபாய் பரிசு தருவதாக மத்திய மாநில அரசுகள் அறிவித்து இருந்தன. தடை செய்யப்பட்ட இயக்கமான இந்திய கம்யூனிஸ்ட் மாவோயிஸ்ட் பிரிவின் பொதுச்செயலாளராகவும் இருந்துள்ளார்.

இது தொடர்பாக சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் கூறியதாவது: மாநிலத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பஸ்டர் பகுதியில் நக்சல்களை ஒழிப்பதற்கான பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டோம். இந்த நடவடிக்கையில் கிடைத்த வெற்றி மத்திய படை மற்றும் மாநில போலீசாரை சேரும். நேற்று நாராயண்பூர் மாவட்டத்தில் 27 நக்சல்களை நமது பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். இரண்டு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.


நக்சல் புரட்சியின் முதுகெலும்பு என அழைக்கப்படும் பசவ ராஜு என்ற நக்சல் முக்கிய தலைவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவரது தலைக்கு மத்திய மாநில அரசுகள் பரிசுத்தொகை அறிவித்துள்ளன. என்.ஐ.ஏ., ரூ.50 லட்சமும், ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில அரசுகள் தலா ரூ.25 லட்சமும் பரிசுத்தொகை அறிவித்து இருந்தன.

பசவராஜ் கொலை மூலம், நக்சலைட்களின் முதுகெலும்பு உடைக்கப்பட்டு உள்ளது. பசவராஜ் கொல்லப்பட்டதன் மூலம், பாதுகாப்பு படையினர் மிகச்சிறப்பான சாதனையை படைத்துள்ளனர். நக்சலைட்களை ஒழிப்பதற்கான கவுன்ட் டவுண் துவங்கி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement