நெல்லையில் இளைஞரை தாக்கிய போலீசாருக்கு ரூ.4 லட்சம் அபராதம்
சென்னை:திருநெல்வேலியில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞரை தாக்கிய போலீசாருக்கு, 4 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலியைச் சேர்ந்த சந்திரா என்பவர், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் அளித்த புகார் மனு:
கடந்த 2019 டிசம்பர் 10ல், திருநெல்வேலி டவுன் காவல் நிலைய சப் - இன்ஸ்பெக்டர் விமலன், காவலர் மகாராஜன் ஆகியோர், எங்களது மளிகை கடையில் அத்துமீறி நுழைந்தனர்; என் மகன் பேச்சிவேல் எங்கே என கேட்டனர்.
அவர் இல்லை என கூறினோம். அதனால் ஆத்திரம் அடைந்து, கடையில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர். இதனால், பெரும் சேதம் ஏற்பட்டது.
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தோம்; நடவடிக்கை எடுக்கவில்லை.
கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்ததால் ஆத்திரம் அதிகமாகி, மகனை விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்துக்கு வரவழைத்து, சட்டவிரோதமாக இரண்டு நாட்கள் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
மனித உரிமை மீறலில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பிறப்பித்த உத்தரவு:
காவல் நிலையத்தில் பேச்சிவேலுவின் கை, கால்களை கட்டி வைத்து அடித்துள்ளனர்; காலில் சிலிண்டரை தொங்கவிட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
பேச்சிவேல் எப்போது கைது செய்யப்பட்டார்; எங்கு, எப்போது முதலுதவி அளிக்கப்பட்டது போன்ற விபரங்களை காவல் துறை மறைத்துள்ளது.
விசாரணை என்ற பெயரில், பேச்சிவேலுவை தாக்கியதையும், மனித உரிமை மீறலில் ஈடுபட்டதையும் ஏற்க முடியாது.
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு, தமிழக அரசு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
சப் - இன்ஸ்பெக்டர் விமலன், காவலர் மகாராஜன் ஆகியோரிடம் தலா 2 லட்சம் ரூபாயை வசூலித்து கொள்ளலாம். அவர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.