'நானே தலைவர் அறிவிப்பை வாபஸ் பெறணும்': சமாதானத்திற்கு அன்புமணி நிபந்தனை

4

'நானே தலைவர்' என்ற அறிவிப்பை திரும்பப் பெற்றால்தான், ராமதாஸ் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பது என்ற முடிவில், பா.ம.க., தலைவர் அன்புமணி உறுதியாக இருப்பதாக, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த, 11ல் மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை முழுநிலவு மாநாட்டில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதை தொடர்ந்து, அவருக்கும் அன்புமணிக்கும் இடையிலான மோதல் வலுத்து வருகிறது.

90 சதவீதம் ஆப்சென்ட்



கடந்த 16ம் தேதி முதல், திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில், மாவட்டத் தலைவர்கள், செயலர்கள், இளைஞரணி, வன்னியர் சங்க நிர்வாகிகள் என, தொடர் ஆலோசனையில் ராமதாஸ் ஈடுபட்டுள்ளார்.

ஆனால், அன்புமணியின் ஆதரவாளர்களாகவும் இருக்கும் கட்சி நிர்வாகிகள் 90 சதவீதம் பேர், ராமதாஸ் கூட்டிய கூட்டங்களுக்குச் செல்லவில்லை.

இதனால், ராமதாஸ் 'அப்செட்' ஆனார். இருந்தபோதும், அன்புமணியுடன் எளிதில் சமாதானம் ஆகவில்லை; கசப்புகளையும் அதிகப்படுத்தாமல் பேசத் துவங்கினார்.

நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், 'அன்புமணியுடன் எந்த மனக்கசப்பும் இல்லை. இனி நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்பார்' என்றார்.

இந்நிலையில், பா.ம.க.,வின் துணை அமைப்பான சமூக முன்னேற்ற சங்க நிர்வாகிகள் கூட்டத்திற்கு, நாளை ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார். ராமதாஸ் தீவிர ஆதரவாளரான கவுரவத் தலைவர் ஜி.கே.மணியும், 'ராமதாசும், அன்புமணியும் விரைவில் சந்திப்பர்' என கூறியுள்ளார்.

இதனால், நாளை நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில், அன்புமணி பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இது பற்றி, அவரது ஆதரவாளர்கள் கூறியதாவது:

ஆயிரம் கசப்புகள் இருந்தாலும், வன்னியர் சங்க மாநாட்டை ராமதாஸ் தலைமையில் மிகப் பிரம்மாண்டமாக நடத்திக் காட்டியவர் அன்புமணி. இதற்காக, அவருடைய மொத்த குடும்பமும், தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மாநாட்டுக்காக உழைத்தது.

மனவருத்தம்



ஆனால், மாநாட்டில் கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணியை பாராட்டிய ராமதாஸ், அன்புமணியின் உழைப்பு குறித்து பெரிதாக பேசவில்லை. இதனால், அன்புமணியின் குடும்பம் உடைந்து போனது.

இப்படி கடுமையான மனவருத்தத்தில் அன்புமணி இருக்கும்போதே, அவருக்கு முறையான அழைப்பு எதுவுமின்றி, வன்னியர் சங்க நிர்வாகிகள் கூட்டம் என, தொடர்ச்சியாக தைலாபுரத்தில் கட்சி தொடர்பான கூட்டங்களை கூட்டினார் ராமதாஸ்.

இந்த சமயத்தில் தான், ராமதாசுக்கு கட்சி நிர்வாகிகள் வாயிலாகவே பதிலடி கொடுத்தார் அன்புமணி.

கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்துக்கு ராமதாஸ் அழைப்பு விடுத்தும், 90 சதவீத நிர்வாகிகள் அன்புமணியின் ஒற்றை சொல்லுக்கு கட்டுப்பட்டு கூட்டத்துக்கு செல்லாமல் புறக்கணித்தனர்.

இதனால், கட்சி அன்புமணியின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை வெளிப்படையாக உணர்த்தியது.

ஆனாலும், சிலரின் துாண்டுதலில், பெற்ற மகனுக்கு எதிராக ராமதாஸ் செயல்பட்டு வருகிறார். அதனால்தான், 'கட்சியின் தலைவரும் நானே' என ராமதாஸ் அறிவித்தார்.

கீழே இறங்கி வரணும்



கூடவே, 'சிங்கத்தின் கால்கள் பழுதுபடவில்லை என்பதை நிருபிக்கவே நீச்சல் அடித்தேன்' எனக் கூறி, நீச்சல் அடிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதெல்லாம் தான் குழப்பத்துக்கு முக்கிய காரணம். இத்தனைக்கு பின்பும், அன்புமணி அமைதியாகத்தான் இருக்கிறார்.

இந்த சூழ்நிலையிலாவது, யதார்த்தத்தை உணர்ந்து ராமதாஸ் தன்னுடைய நிலையில் இருந்து கீழே இறங்கி வர வேண்டும்; கட்சிக்கு நானே தலைவர் என்ற அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும்.

அப்போதுதான், ராமதாசுடன் சமாதானம் ஏற்படுத்திக் கொள்வார் அன்புமணி. அதன்பின்பே, ராமதாஸ் நடத்தும் ஆலோசனை கூட்டங்களில், அன்புமணி பங்கேற்பார். அதுவரை புறக்கணிப்பு தொடரும்.


இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement