தீய சக்திகளை அழிக்க போர் வேண்டும் ஸ்ரீசங்கர பாரதி சுவாமிகள் பேச்சு

சென்னை:''போர் நடத்தி தான் அமைதியை நிலைநாட்ட முடியும்,'' என, கர்நாடகாவில் உள்ள, ஸ்ரீயோகானந்தேஸ்வர சரஸ்வதி மடத்தின் ஸ்ரீசங்கர பாரதி மகாசுவாமிகள் தெரிவித்தார்.
ஸ்ரீசிருங்கேரி பாரதி வித்யாஷ்ரம் சார்பில், சென்னை தி.நகரில் நேற்று நடந்த, 'இந்தியாவின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கான சொற்பொழிவு' நிகழ்வில், ஸ்ரீசங்கர பாரதி மகாசுவாமிகள் பேசியதாவது:
போர் வாயிலாக தான் அமைதியை நிலைநாட்ட முடியும். எங்கு தீய சக்திகள் இருக்கின்றனவோ, அங்கு அமைதி இருக்காது. தீய சக்திகளை அழிக்காமல் நல்லது நடக்காது.
எனவே, தீய சக்திகளை அழிக்க போர் நடத்தியே ஆக வேண்டும். அதையே ராமாயணம், மகாபாரதம் நமக்கு உணர்த்துகின்றன. பல போர்கள் நடத்தப்பட்டே தர்மம் நிலைநாட்டப்பட்டுள்ளது.
நம் உள் மனதுக்குள் இருக்கும் வெறுப்புணர்வு தான் அமைதியை சீர்குலைக்கிறது. எனவே, நாம் யார் மீதும் வெறுப்புணர்வு கொள்ளக்கூடாது. அதைத்தான் அமைதியின் திருவுருவான ஆதிசங்கரர் வலியுறுத்தி இருக்கிறார்.
அவர் காட்டிய அத்வைத பாதையில் நாம் பயணித்து, அன்பே உருவாக வாழ வேண்டும். அத்வைத பாதையில் சென்றால், நமக்கு மன வலிமை கிடைக்கும்; வெறுப்புணர்வும் இருக்காது.
இவ்வாறு மகாசுவாமிகள் பேசினார்.
பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் பேசியதாவது:
இந்நிகழ்வை சிருங்கேரி மடம் நடத்துகிறது. சிருங்கேரி மடத்தின் மடாதிபதியாக இருந்த வித்தியாரண்யர், விஜயநகர பேரரசு உருவாக காரணமாக இருந்தார்.
விஜயநகர பேரரசின் வீரதீர வழிபாடுகளால் தான் தென் மாநிலங்களில், இன்றும் கோவில்கள் நிலைத்து நிற்கின்றன.
இவ்வாறு பேசினார்.
மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகமான பி.ஐ.பி., முன்னாள் இயக்குநர் மாரியப்பன் பேசியதாவது:
நாம் அமைதியை விரும்பினாலும், நம் அண்டை நாடுகள் பயங்கரவாதிகளை ஏவி விட்டு, பயங்கரவாத தாக்குதலை நடத்துகின்றன. இந்த தாக்குதலை முடிவுக்கு கொண்டு வரும் வரை, இந்தியாவில் நிரந்தர அமைதியை நிலைநாட்ட முடியாது.
பயங்கரவாதிகளுக்கு நம் நாட்டுக்கு உள்ளே இருந்து ஆதரவு கிடைக்கிறது. அதனால், உள்நாட்டிலும் பிரச்னை ஏற்படுகிறது.
இதற்கும் முடிவு கட்ட வேண்டும். அமைதி இருந்தால் தான் வளர்ச்சி இருக்கும். இதை உணர்ந்து, பயங்கரவாதத்தை அனைவரும் எதிர்க்க வேண்டும்.
இவ்வாறு பேசினர்.
சிருங்கேரி வித்யாதீர்த்த பவுண்டேஷன் தலைவர் கிருஷ்ணன், சம்ஸ்கிருத கல்லுாரி பேராசிரியர் மணி திராவிட சாஸ்திரிகள், பிரபல நடன கலைஞர் அம்பிகா காமேஷ்வர், மூத்த வழக்கறிஞர் ஹரிசங்கர், பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளி முதல்வர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.