சாலை விரிவாக்க பணி கோட்ட பொறியாளர் ஆய்வு
எருமப்பட்டி, நாமக்கல் ரெட்டிபட்டியில் இருந்து, எருமப்பட்டி வரை சாலை விரிவாக்கம் செய்யும் பணியை கோட்ட பொறியாளர் ஆய்வு செய்தார்.
நாமக்கல் அருகே ரெட்டிபட்டியில் இருந்து, எருமப்பட்டி வரை போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில், 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ், நெடுஞ்சாலைத்
துறையின் மூலம், ரூ.40 கோடி மதிப்பீட்டில் வளைவுகள் இல்லாத சாலை விரிவாக்கம் செய்யும் பணி, சில மாதங்களுக்கு முன்பு துவங்கியது. பணியில் தற்போது சிறு பாலம் அமைத்தல், சாலையை அகலப்படுத்துதல் மற்றும் துாசூர் ஏரியில் உயர் மட்ட பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இப்பணியை சேலம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் சசிக்குமார் ஆய்வு செய்தார். அப்போது, அகலப்படுத்தும் சாலை பகுதியின் தள அடர்த்தி, ஜல்லி கலவையின் விகிதங்கள் மற்றும் பாலப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
சேந்தமங்கலம் உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ்குமார், இளநிலை பொறியாளர் சுப்பிரமணியன், பிரானேஷ் உடனிருந்தனர்.