ஏற்காடு, ஊட்டியில் 5 நாள் சிறப்பு பயிற்சி பள்ளி மாணவ, மாணவியர் 900 பேர் தயார்
நமது நிருபர்
ஏற்காடு, ஊட்டியில் நடக்கும் கோடை கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்களுக்கு, அரசு பள்ளி மாணவ, மாணவியர், 900 பேர் தேர்வு செய்யப்பட்டு தயாராக உள்ளனர்.
தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தனித்திறன்களை மெருகேற்ற, மலை சுற்றுலா தலங்களில் கோடை கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. நடப்பாண்டு பயிற்சி முகாம் நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நடக்க உள்ளது.
இதற்கு கல்வி, இலக்கியம், அறிவியல் வினாடி - வினா போட்டிகளில் சிறந்து விளங்கிய, பிளஸ் 1 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன்படி ஊட்டி முகாமில் பங்கேற்க, 625 மாணவியர் தயாராக உள்ளனர். இதில் வர இயலாத மாணவியர் இடங்களை நிரப்ப, 429 மாணவியர் காத்திருப்போர் பட்டியலும் தயாராக உள்ளது.
அதேபோல் ஏற்காடு முகாமில் பங்கேற்க, 275 மாணவர்களும், காத்திருப்போர் பட்டியலில், 171 மாணவர்களும் இடம்பெற்றுள்ளனர். இப்பட்டியல் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பி, பெற்றோர் ஒப்புதல் கடிதம் பெற்று சமர்ப்பிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
முகாமுக்கு வரும் மாணவ, மாணவியர், தேவையான உடைகள், போர்வைகள் உள்ளிட்டவற்றை, அவர்களே கொண்டு வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 20 மாணவியருக்கு ஒரு ஆசிரியை வீதம், வழிகாட்டி ஆசிரியர்களும் பங்கேற்க உள்ளனர். 5 நாட்கள் முகாமில் நடனம், கதை, கவிதை பயிற்சி பட்டறை, கருத்து பரிமாற்றம், பண்பாடு மற்றும் கலாசார பகிர்வு, வானியல் அறிதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படும். இறுதி தேர்வு பட்டியல் தயாரான பின், முகாம் நடக்கும் நாள் விபரம் தெரிவிக்கப்பட உள்ளது.