போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் திறப்பு பட்டாபிராமபுரத்தில் 2 நாள் போராட்டம் வீண்

திருத்தணி:சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திருத்தணி அடுத்த பட்டாபிராமபுரம் பேருந்து நிறுத்தம் அருகே, மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் கடந்த இரு நாட்களுக்கு முன் புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு தீர்மானித்து, கடந்த 20ம் தேதி காலை கடைக்கு மதுபாட்டில்கள் கொண்டு வரப்பட்டன.

தகவல் அறிந்ததும் பட்டாபிராமபுரத்தை சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட ஆண்கள் டாஸ்மாக் கடை திறக்க அனுமதிக்க மாட்டோம் என கடை முன் ஆர்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து திருத்தணி ஆர்.டி.ஓ., மற்றும் டி.எஸ்.பி.,யிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

இதனால் அன்று கடை திறக்கவில்லை. மறுநாள் காலையில் டாஸ்மாக் கடை முன், 100 பெண்கள் உள்பட 150க்கும் மேற்பட்ட பட்டாபிராமபுரம் கிராம மக்கள் கடை திறக்கவிட மாட்டோம் என ஆர்பாட்டம் நடத்தியதால், அன்றும் கடை திறக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று மாவட்ட நிர்வாகம் டாஸ்மாக் கடை திறக்க தீர்மானித்து, மாவட்ட எஸ்.பி., ஸ்ரீனிவாச பெருமாளிடம் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என, தெரிவித்தனர்.

எஸ்.பி., உத்தரவின்படி திருத்தணி டி.எஸ்.பி.,கந்தன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மதியரசன் மற்றும் போலீசார் என, 150க்கும் மேற்பட்ட போலீசார் டாஸ்கடைக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

போராட்டம் நடத்த வருவோரை கைது செய்து ஏற்றி செல்வதற்கு நான்கு அரசு பேருந்துகள், ஆம்புலன்ஸ், மற்றும் தீயணைப்பு வாகனமும் தயார் நிலையில் வைத்திருந்தனர். இதனால் மக்கள் வீடுகளிலேயே இருந்தனர். மதியம், 12:00 மணிக்கு டாஸ்மாக் கடை திறந்து மதுவிற்பனை துவங்கியது. இதனால் பட்டாபிராமபுரம் கிராம மக்களின் இரு நாள் போராட்டம் வீணானது.

Advertisement