இயற்கை எழில் கொஞ்சும் ரயில் பயணத்திற்கு தடை
ரயில் பயணத்தை விரும்பாதவர்கள் எவரும் இல்லை என்றே சொல்லலாம். பஸ்சில் பயணம் செய்வதை விட ரயிலில் பயணம் செய்யவே சிறார்கள் முதல், பெரியோர் வரை ஆர்வத்துடன் இருப்பர்.
அதுவும் நண்பர்கள், உறவினர்களுடன் ரயிலில் சுற்றுலா செல்வோர், ஆனந்தமாய், மகிழ்ச்சியாய் இருப்பதை கண்டிருப்போம். நாமும் அந்த சுகத்தை அனுபவத்திருப்போம்.
கண்களுக்கு விருந்து
இந்த வகையில், யஷ்வந்த்பூர் - கார்வார் இடையே, திங்கள், புதன், வெள்ளி என வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படும், 16515 என்ற எண் உள்ள ரயிலில் பயணம் செய்வதற்கு, பலரும், மாத கணக்கில் தவம் இருப்பர். மறு மார்க்கத்தில், செவ்வாய், வியாழன், சனிக்கிழமை என வாரத்தில் மூன்று நாட்கள், 16516 என்ற எண் ரயில் கார்வாரில் இருந்து யஷ்வந்த்பூருக்கு வரும்.
இந்த ரயில் மார்க்கத்தில், ஹாசன் மாவட்டம், சக்லேஸ்பூரில் இருந்து, தட்சிண கன்னடா மாவட்டம், சுப்பிரமணியா சாலை வரையில் 55 கி.மீ., துாரம் செல்லும் போது, எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று இயற்கையின் அழகு, நம் கண்களுக்கு விருந்தளிக்கும்.
ஜாலி பயணம்
வழி நெடுகிலும், மலைகளை குடைந்து அமைக்கப்பட்டுள்ள 57 சுரங்க பாதைகளை கடந்து செல்வது தனி உற்சாகத்தை அளிக்கும். சிறியது முதல், பெரியது வரை என மொத்தம் 109 பாலங்களை காணலாம். பாலத்தில் கீழ் சிறிய சிறிய ஓடைகளில் தண்ணீர் பாய்ந்து செல்வதை பார்க்கலாம்.
இந்த பயணம் இனிதே அமைவதற்காகவே, தென்மேற்கு ரயில்வே சார்பில், ரயிலின் கடைசியில், 'விஸ்டோடோம்' என்ற சொகுசு பெட்டி இணைக்கப்பட்டிருக்கும். இதை பார்த்தாலே பரவசம் தான். சொகுசாகவும், ஜாலியாகவும் பயணம் செய்யலாம். ஒவ்வொரு இருக்கையும், 180 டிகிரியில் சுழலும் வகையிலும், 'ஏசி' வசதியுடன் அமைக்கப்பட்டிருக்கும்.
இயற்கையை ரசிப்பதற்காகவே, இரு பக்கமும் பெரிய அளவில் கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டிருக்கும். கூடுதலாக மேல் பகுதியிலும், பைபரில் கூரை அமைக்கப்பட்டிருக்கும்.
தமிழர்கள் அதிகம்
குளிர் மற்றும் மழை காலங்களில் செல்லும் போது, வழி நெடுகிலும் ஆங்காங்கே மலைகளின் மீது அருவிகளை பார்க்கலாம். இதற்காகவே இந்த ரயிலில் பயணம் செய்வதற்கு, இரண்டு மாதங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து விடுவர்.
இந்த ரயிலில், பெரும்பாலும் தமிழர்கள் அதிகமாக பயணம் செய்வது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, உடுப்பி, குக்கே சுப்பிரமணியா, சிருங்கேரி செல்லும் தமிழர்கள், சென்னை உட்பட வெவ்வேறு நகரங்களில் இருந்து, பெங்களூரு வந்து, இந்த ரயிலில் மாறி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
நவ., 1 வரை தடை
சக்லேஸ்பூரில் இருந்து சுப்பிரமணியா சாலை வரை மலை பகுதி என்பதாலும், டீசல் இன்ஜின்கள் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது, பாதுகாப்பு மற்றும் மின்மயமாக்கல் பணிகள் நடத்தப்பட உள்ளதால், இந்த ரயில் ஜூன் 1ம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதி வரை இயக்கப்படமாட்டாது என்று தென்மேற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
இந்த மார்க்கத்தில் செல்வதே இயற்கையின் அழகை ரசிப்பதற்காக தான் என்பதால், மின்மயமாக்கல் செய்யப்படும் பணியால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படலாம் என்று இயற்கை ஆர்வலர்கள் ஆதங்கம் அடைந்துள்ளனர்.
ரயில் சேவை
மேலும், மழை காலத்தில் தான் ஆங்காங்கே அருவிகள் உருவாகும் என்பதால், அதே நேரத்தில் ரயில் சேவை நிறுத்தப்படுவதால், தமிழக பயணியர் உட்பட பலரும் கவலை அடைந்துள்ளனர் என்றே சொல்லலாம்.
கர்நாடகாவில், அக்டோபரில் பள்ளி, கல்லுாரிகளுக்கு தசரா விடுமுறை இருக்கும் என்பதால், பலரும் இந்த மார்க்கத்தில் செல்ல திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது
- நமது நிருபர் -.
மேலும்
-
முத்தரையர் 150வது சதய விழா கொண்டாட்டம்
-
பயங்கரவாதத் தாக்குதல் தொடர்ந்தால் கடும் விளைவை சந்திக்க நேரிடும்; பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் எச்சரிக்கை
-
கேரளாவில் தொடரும் கனமழை; 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
-
தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை; பிரேமலதா குற்றச்சாட்டு
-
பிரதமர் மோடி தலைமையில் நிடி ஆயோக் கூட்டம்; டில்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்!
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 சரிவு; இன்றைய நிலவரம் இதோ!