ராஜஸ்தான் அணியில் விளையாட வாய்ப்பு கிரிக்கெட் வீரரிடம் ரூ.24 லட்சம் அம்பேல்

பெலகாவி: ஐ.பி.எல்., போட்டியில் ராஜஸ்தான் அணியில் விளையாட வாய்ப்பு அளிப்பதாக கூறி, 19 வயது கிரிக்கெட் வீரரிடம் 24 லட்சம் ரூபாய் சைபர் மோசடி செய்யப்பட்டது தெரிய வந்து உள்ளது.

பெலகாவி, சிக்கோடி தாலுகா சின்சானி கிராமத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ராகேஷ் யாதுரே, 19. இவர், கடந்த ஆண்டு மே மாதத்தில் நடந்த மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் பங்கு பெற்று, சிறப்பாக விளையாடிதன் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இவர் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற ஆவலுடன் இருந்தார்.

* இன்ஸ்டாகிராம்

இந்நிலையில், இவரது இன்ஸ்டாகிராம் கணக்குக்கு, கடந்த டிசம்பர் 22ல் அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து ஒரு குறுந்தகவல் வந்து உள்ளது. அதில், பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாட, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் 2,000 ரூபாய் அனுப்ப வேண்டும் என கூறப்பட்டது. இதை நம்பிய அவரும், பணத்தை அனுப்பினார்.

இதையடுத்து, நீங்கள் அணியில் விளையாட விரும்பினால், ஒரு போட்டிக்கு 8 லட்சம் ரூபாய்க்கு மேல் அனுப்ப வேண்டும் என வாட்ஸாப்பில் தகவல் வந்தது.

இதை நம்பிய அவரும், கேட்ட பணத்தை அனுப்பினார். இதே போல, கடந்த சில மாதங்களாக பணம் கேட்டு தகவல்கள் வந்தன. அவரும் அனுப்பி கொண்டே இருந்தார். இப்படி மொத்தம் 24 லட்சம் ரூபாய் அனுப்பினார். ஆனால், நடப்பாண்டு ஐ.பி.எல்., போட்டியில் ராஜஸ்தான் அணியில் அவர் இடம் பெறவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்டார்.

இது குறித்து சமீபத்தில் சி.இ.என்., எனும் சைபர் குற்றப்பிரிவு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இது பற்றி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

* ஏமாற்றம்

இது குறித்து நேற்று, பெலகாவி எஸ்.பி., பீமாசங்கர் குலேடா கூறியதாவது:

ராகேஷின் தந்தை கே.எஸ்.ஆர்.டி.சி.,யில் பாதுகாவலராக பணிபுரிகிறார். வீட்டில் பணக்கஷ்டம் இருந்த போதும், கடன் வாங்கி 24 லட்சம் ரூபாயை அனுப்பி உள்ளனர். ஆனால், அவர்களை சைபர் திருடர்கள் ஏமாற்றி விட்டனர். பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கி கணக்குகளில் தற்போது ஒரு ரூபாய் கூட இல்லை.

வங்கி கணக்கை வைத்து விசாரித்ததில், சைபர் திருடர்கள் ராஜஸ்தானை சேர்ந்தோர் என தெரிந்து உள்ளது. சைபர் கிரைம் போலீசார், ராஜஸ்தானுக்கு சென்று விசாரிப்பர். திறமைக்கு எப்போதும் இடம் உண்டு. எனவே, இளைஞர்கள் யாரும் ஏமாற வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

***

Advertisement