உள்துறை அமைச்சருக்கு துணை முதல்வர் 'வக்காலத்து'

பெங்களூரு: ''உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், ரன்யா ராவுக்கு பணம் அளித்து இருக்கலாம். அதற்காக அவர் தங்க கடத்தலை ஊக்குவித்தார் என அர்த்தம் கிடையாது,'' என்று துணை முதல்வர் சிவகுமார் கூறி உள்ளார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் ஒரு நேர்மையான மனிதர். அவரது கை சுத்தம். ரன்யாராவின் குடும்ப நிகழ்ச்சிக்கு, அவர், 15 முதல் 25 லட்சம் ரூபாய் வரை பரிசாக அளித்திருக்கலாம். அதற்காக, அவர் தங்க கடத்தலை ஊக்குவித்தார் என அர்த்தமில்லை. உள்துறை அமைச்சர் சட்டவிரோத செயல்களை ஆதரிப்பாரா.

ரன்யாராவ் தவறு செய்திருந்தால் சட்டப்படி தண்டிக்கப்படுவார். பரமேஸ்வர், சட்டத்தை மதித்து நடப்பவர். எட்டு ஆண்டுகள் கட்சி தலைவராக இருந்தவர்; பல சேவைகளை செய்து உள்ளார்.

அவரது தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு உதவி செய்து வருகின்றன. அவ்வகையில் திருமணம், குடும்ப நிகழ்ச்சிக்கு சிறிய தொகை அளித்திருக்கலாம்; நான் அதை மறுக்கவில்லை. இதையடுத்து நடக்க இருப்பதை பொறுத்திருந்தே பார்க்க முடியும். இந்த விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வோம்.

இவ்வாறு அவர்கூறினார்.

Advertisement