ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் 14 வயது சிறுவன்

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்ற வாசகத்தை கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த வாசகங்களுக்கு உயிர் கொடுக்கும் வகையில், பெங்களூரை சேர்ந்த 14 வயது சிறுவனின் கதை உள்ளது.
பெங்களூரு, ஹெப்பால் பகுதியை சேர்ந்தவர் ஷரன், 14. இவரது தந்தை ஸ்ரீதர் ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றுகிறார். தாய் லட்சுமி டாக்டராக பணியாற்றுகிறார். பெற்றோர் இருவரும் பெரிய பணிகளில் உள்ளதால், ஷரனை சிறுவயதில் இருந்து சிறப்பாக வளர்த்தனர்.
சிறுவன் ஷரனை, பல விளையாட்டுகளில் சேருமாறு ஊக்கப்படுத்தினர். இதன் விளைவாக, ஷரன் தனது 4 வயதில் நீச்சல் பயிற்சியில் சேர்ந்தார். மத்ஸ்யா இன் கார்ப்பரேஷன் நீச்சல் கிளப்பில் பயிற்சிக்கு சேர்ந்தார்.
அந்த கிளப்பின் பயிற்சியாளரான ஸ்ரீஷ் ரெட்டி, ஷரனுக்கு பயிற்சி கொடுக்க துவங்கினார். பயிற்சிகள் ஆரம்பித்த சில ஆண்டுகளுக்கு பின், ஷரனிடம் ஏதோ ஒரு திறமை ஒளிந்து இருப்பதை பயிற்சியாளர் கண்டறிந்து உள்ளார்.
ஷரன் நீந்தும் போது அவரது ஆற்றல் அதிகமாக இருப்பதை கண்டறிந்தார். இந்த ஆற்றலுடன், வேகமாக நீந்துவது குறித்து பயிற்சிகள் எடுக்க ஆரம்பித்தார். இந்த பயிற்சிகள், அவரது 8 வயதில் அவருக்கு பெரிதும் உதவின.
கடந்த 2019ல் இருந்து, சப் ஜூனியருக்கான 200 மீ, 400 மீ, 1500 மீ நீச்சல் போட்டிகளில் ஷரன் கலந்து கொண்டார். கலந்து கொள்ளும் போட்டிகளில் பதக்கங்கள் பெறுவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.
இதனால், மாவட்ட அளவிலான நீச்சல் போட்டிகளில் இவரது முகம் அனைவருக்கும் பரிச்சயமானது. இதன் மூலம் 2022, 2023ல் நடந்த மாநில அளவிலான சப் - ஜூனியர், ஜூனியர் பிரிவில் 400 மீ, 800 மீ போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இதனால், இவர் மீது இந்திய நீச்சல் கூட்டமைப்பின் பார்வை விழுந்தது.
இந்த அமைப்பு 2032 பிரிஸ்பேன் ஒலிம்பிக்கை மனிதல் வைத்து, இளம் நீச்சல் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இப்படி, மொத்தம் தேசிய அளவில் 30 வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இதில் ஷரனும் ஒருவராக உள்ளார். இவர்களுக்கு நிதி உதவியும் வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் ஒலிம்பிக் நீச்சல் போட்டியில், நம் நாட்டிற்கு பதக்கம் கிடைக்கவே.
ஷரன் இதுவரை பல பதக்கங்களை வென்று உள்ளார். இதனால், இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் கெம்பாபுராவில் உள்ள ஜெயின் ஹெரிட்டேஜ் பள்ளியில், இவருக்கு மவுசு அதிகமாக உள்ளது.
ஷரனின் நீச்சல் பயிற்சியாளர் ஸ்ரீஷ் ரெட்டி கூறுகையில், “கடந்த நான்கு ஆண்டுகளில் ஷரன் ஒரு முறை கூட பயிற்சிக்கு வராமல் இருந்ததில்லை. இதுவே அவரது வெற்றிக்கு காரணம். அவரிடம் உள்ள உத்வேகம், மற்றவர்களை ஊக்கப்படுத்தும் அளவிற்கு உள்ளது,” என்றார்.
ஷரனின் தந்தை ஸ்ரீதரா கூறுகையில், ''என் மகன் அதிகாலை 4:00 மணிக்கு எழுந்து பயிற்சிக்கு செல்பவன், மாலை 7:00 மணிக்கு தான் வீட்டுக்கு வருவான். அவனுக்கு நேர மேலாண்மை, ஒழுக்கம் பற்றி சிறுவயதிலேயே தெரிந்து விட்டது. நீச்சல் வீரராக இருப்பதற்கான அடிப்படை தேவைகளை கற்று கொண்டு உள்ளான். அவனது கனவுகளுக்கு துணையாக இருப்பேன்,'' என்றார்.
- நமது நிருபர் -
மேலும்
-
வட கிழக்கு மாநிலங்களில் ரூ.75 ஆயிரம் கோடி முதலீடு; முகேஷ் அம்பானி அறிவிப்பு
-
அமலாக்கத்துறை ரெய்டு வந்தால் ஓடிப்போய் பிரதமரை சந்திக்கிறீர்கள்; சீமான் கிண்டல்
-
ஆன்லைன் சூதாட்ட விவகாரம்; மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
-
உலகில் பன்முகத்தன்மை கொண்ட நாடு இந்தியா; முதலீட்டாளர்கள் மாநாட்டில் மோடி பெருமிதம்!
-
அந்தமானில் ஏவுகணை சோதனை; விமானங்கள் பறக்க தடை விதிப்பு!
-
நடுவானில் தத்தளித்த இண்டிகோ விமானம் பத்திரமாக தரையிறங்கியது எப்படி? வெளியானது தகவல்