தாயை போல தடகளத்தில் சாதிக்க துடிக்கும் மகள்

'தாயை போல பிள்ளை; நுாலை போல சேலை' என்ற பழமொழிக்கு ஏற்ப, தாயை போன்று தானும் நாட்டுக்காக தடகள விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்று துடிக்கிறார் உன்னத்தி அய்யப்பா, 18.
பெங்களூரை சேர்ந்தவர் பிரமிளா. 2008ல் சீனாவின் பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் தடகள போட்டியில் பங்கேற்றார். அப்போது, இவரது மகள் உன்னத்தி அய்யப்பாவுக்கு 3 வயது. தாயை போன்று தானும் தடகள போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று விரும்பினார்.
இவரின் தந்தை அய்யப்பா, பயிற்சியாளராக உள்ளார். தன் மனைவி பிரமிளாவுக்கும், அவர் தான் பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து, உன்னத்தி அய்யப்பா கூறியதாவது:
என் அம்மா ஹெப்பத்தலானில் சிறப்பாக செயல்பட்டவர். ஆனால் அவரை போன்று நான், இப்பிரிவில் சாதிப்பேனா என்று தெரியவில்லை. எனவே, 'ஹர்டில்ஸ்'ல் என் கவனத்தை செலுத்தினேன்.
நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்று என்னை, பெற்றோர் வற்புறுத்தினர். இதில் எனக்கு விருப்பம் இல்லை என்றாலும், தினமும் பயிற்சி எடுத்தேன். இப்போது பலனை கொடுக்கிறது. அதேபோன்று, நான் உயரமாக வளர வேண்டும் என்பதற்காக, கூடைப்பந்து விளையாட்டில் சேர்த்து விட்டனர்.
அன்று முதல் தடகள விளையாட்டில் தொடர்ந்து பங்கேற்று வருகிறேன். ஆரம்பத்தில், சிட்னி ஒலிம்பிக்கில் 110 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சாம்பியன் பட்டம் பெற்ற அர்னியர் கர்ஷியாவிடம் பயிற்சி பெற்று வந்தேன். ஆனால், அது எனக்கு சரிவரவில்லை.
கடந்த ஒன்பது மாதங்களாக என் தந்தையிடம் பயிற்சி பெற்று வருகிறேன். எனக்கு ஏற்றபடி பயிற்சி அளிக்க அவரால் மட்டுமே முடியும். என் தந்தையே எனக்கு பயிற்சியாளராக இருப்பது சந்தோஷம் தான். ஆனாலும், சில நேரங்களில் வீட்டிலும், பயிற்சி மையத்திலும் அவரே இருக்கிறார் என்று தோன்றும். வீட்டில் அவர், 'அம்பி'யாக இருந்தாலும், மைதானத்தில் அவர், 'அந்நியனாக' மாறிவிடுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, உன்னத்தி தந்தை அய்யப்பா கூறியதாவது:
ஆசிய விளையாட்டு போட்டியில், அவரின் தாயார் பதக்கம் பெற்றதை பார்த்தது முதல், உன்னத்தியும், தடகள விளையாட்டு வீராங்கனை ஆக வேண்டும் என்று விரும்பினார். அவரின் விருப்பத்துக்கு ஏற்ப பயிற்சி அளித்து வருகிறேன். உன்னத்துக்கு அவரின் தாய் 'ரோல் மாடல்'.
புவனேஸ்வரில் நடந்த பெடரேஷன் கப் போட்டியில், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 24.4 விநாடிகளில் இலக்கை அடைத்து முதல் பரிசை தட்டி சென்றார்.
அதுபோன்று கடந்தாண்டு துபாயில் நடந்த 20 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், 24.35 விநாடிகளில் கடந்து, வெண்கல பதக்கம் பெற்றார்.
அவரின் தாயார் போன்று, 'ஹெப்பத்தலான்' பிரிவில் ஈடுபட முயற்சித்தார். ஆனால், 'ஹர்டில்ஸ்' எனும் தடைகள் தாண்டி ஓடும் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டு வருகிறார். இது மட்டுமின்றி, நீச்சல், கூடைப்பந்து, பேட்மின்டன் போட்டிகளிலும் விளையாடுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
மேலும்
-
பாகிஸ்தானுக்கு ஆதரவாக போலி செய்தி பரப்பும் காங்கிரஸ்; பா.ஜ., குற்றச்சாட்டு
-
முத்தரையர் 150வது சதய விழா கொண்டாட்டம்
-
பயங்கரவாதத் தாக்குதல் தொடர்ந்தால் கடும் விளைவை சந்திக்க நேரிடும்; பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் எச்சரிக்கை
-
கேரளாவில் தொடரும் கனமழை; 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
-
தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை; பிரேமலதா குற்றச்சாட்டு
-
பிரதமர் மோடி தலைமையில் நிடி ஆயோக் கூட்டம்; டில்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்!