ரூ.3,400 கோடி!: மைசூரு மன்னர் குடும்பத்துக்கு கர்நாடக அரசு வழங்க உத்தரவு

பெங்களூரின், பல்லாரி சாலை மற்றும் ஜெயமஹால் சாலை பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி மிக அதிகமாக உள்ளது. இதற்கு தீர்வு காணும் நோக்கில், பல்லாரி சாலை, ஜெயமஹால் சாலையை அகலப்படுத்த, மாநில அரசு திட்டமிட்டது. இப்பணிகளுக்காக 2023ல், பெங்களூரு அரண்மனை மைதானத்தை சேர்ந்த, 15.39 ஏக்கர் நிலத்தை, அரசு கையகப்படுத்தியது.

இதற்கு மைசூரு அரச குடும்பத்தினர் ஆட்சேபம் தெரிவித்தனர். நிலத்துக்கான நிவாரணம் வழங்கும்படி வலியுறுத்தினர். ஆனால் அரசு மவுனம் சாதித்தது.

இது குறித்து, உச்ச நீதிமன்றத்தில், அரச குடும்பத்தினர் மனு தாக்கல் செய்தனர். விசாரணை நடத்திய நீதிமன்றம், அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு ஏக்கருக்கு 220 கோடி ரூபாய் வீதம், 3,400 கோடி ரூபாய் டி.டி.ஆர்., எனும் மாற்றக்கூடிய மேம்பாட்டு உரிமை தொகையாக அளிக்க வேண்டும் என, கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த தொகையை உச்ச நீதிமன்றத்தில் டிபாசிட் செய்யும்படியும் உத்தரவிட்டது.

ஆனால், இதற்கு அரசு சம்மதிக்கவில்லை. மாறாக டி.டி.ஆர்., தர மறுத்து அவசர சட்டமும் கொண்டு வந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவை அவமதித்தது மற்றும் நிவாரணம் வழங்காதது குறித்து அரச குடும்பத்தினர் மீண்டும், உச்ச நீதிமன்றம் சென்றனர்.

கர்நாடக அரசு சார்பில் வாதிட்ட மூத்த வக்கீல் கபில் சிபில், 'அரண்மனை நிலத்தை முழுதுமாக பயன்படுத்தவில்லை. பயன்படுத்தாத நிலத்துக்கு, எப்படி நிவாரணம் வழங்க முடியும்' என்றார்.

விசாரணையின் முடிவில், அந்த தொகையை, நீதிமன்றத்தில் டிபாசிட் செய்யும்படி உத்தரவிட்டது. கர்நாடக அரசும் உச்ச நீதிமன்ற பதிவாளர் பெயரில் தொகையை டிபாசிட் செய்தது.

இதற்கிடையே பெங்களூரு அரண்மனை நிலத்துக்கு, நிவாரணம் வழங்காமல் தப்பிக்கும் நோக்கில், மாநில அரசு அவசர, அவசரமாக பெங்களூரு அரண்மனை நில மசோதாவை கொண்டு வந்தது. இந்த மசோதா சட்டசபை, மேல்சபையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு கவர்னரும் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளார்.

இந்த சட்டத்தின்படி, அடிப்படை வசதிகளை மேற்கொள்ள தனியார் நிலத்தை கையகப்படுத்தலாம். இந்த சட்டத்தை பிரயோகித்து, அரண்மனை நிலத்தை பயன்படுத்துவது, கர்நாடக அரசின் எண்ணமாகும்.

இதற்கிடையில், உச்ச நீதிமன்ற பதிவாளர் வசம் 3,400 கோடி ரூபாய் தொகையை வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரச குடும்பத்தினர் மனு தாக்கல் செய்தனர்.

மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ், அரவிந்த்குமார் முன்னிலையில், நேற்று விசாரணை நடந்தது. மனுதாரரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 3,400 கோடி ரூபாயை உடனடியாக, அரச குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டனர்.

இதன் மூலம் மாநில அரசு மற்றும் அரச குடும்பத்தினர் இடையே நடந்து வந்த சட்ட போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த சட்ட போராட்டத்தில் அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்தும் பிரச்னை முடிந்ததால், இனி பல்லாரி சாலை மற்றும் ஜெயமஹால் சாலையை அகலப்படுத்தும் பணிகளை அரசு துவங்கும் என தெரிகிறது.

Advertisement