'நிட்ஜோன் -2025' கண்காட்சி அதிநவீன பின்னலாடை இயந்திரங்களுடன் துவங்கியது!

திருப்பூர் : திருப்பூர் பின்னலாடை தொழில்துறைக்கு தேவையான, அதிநவீன இயந்திரங்கள் மற்றும் உப உற்பத்தி பொருட்களுடன், 'நிட்ஜோன்' கண்காட்சி நேற்று துவங்கியது.

'நிட்ஜோன் டிரேடு எக்ஸ்போ' நிறுவனம் சார்பில், திருப்பூர் வேலன் ஓட்டல் கண்காட்சி அரங்கத்தில், 'நிட்ஜோன்' கண்காட்சி - 2025' நேற்று துவங்கியது. ஜவுளி மற்றும் பின்னலாடை உற்பத்தியை மேம்படுத்தும் புதிய தொழில்நுட்பங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

நவீன இயந்திரங்கள், உதிரி பாகங்கள், ஆடை தயாரிப்புக்கான உபபொருட்கள், பனியன் துணி ரகங்கள் இடம்பெற்றுள்ளன. புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட 'நிட்டிங்', 'பிரின்டிங்', கம்ப்யூட்டர் எம்பிராய்டரி, துணிகளை 'கட்டிங்' செய்யும் நவீன மெஷின்கள்;

புதிய அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள ஆடை வடிவமைப்பு பிரிவுக்கான தையல் இயந்திரங்கள் இடம்பெற்றுள்ளன. நேற்று நடந்த கண்காட்சி துவக்க விழாவில், அமைப்பாளர்கள் கார்த்திகேயன், பரத், ஸ்ரீதர் வரவேற்றனர்.

கண்காட்சியை, தமிழ்நாடு ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்புக்குட்டி திறந்து வைத்தார். தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன், பின்னலாடை துணி உற்பத்தியாளர்கள் சங்க (நிட்மா) தலைவர் ரத்தினசாமி, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொருளாளர் கோபாலகிருஷ்ணன், மத்திய வர்த்தக வளர்ச்சி வாரிய உறுப்பினர் ராஜா சண்முகம்;

திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம், திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன், ஸ்ரீபுரம் அறக்கட்டளை தலைவர் ஜெயசித்ரா சண்முகம், 'சிம்கா' தலைவர் விவேகானந்தன், 'டெக்பா' தலைவர் ஸ்ரீகாந்த், 'டிப்' தலைவர் மணி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.

கம்ப்யூட்டர் எம்ப்ராய்டரி அசோசியேஷன் தலைவர் கோபாலகிருஷ்ணன், நுால் வியாபாரிகள் சங்க தலைவர் முருகேசன் ஆகியோருடன் சென்று, கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டனர். கண்காட்சி அமைந்திருந்தவர்கள், காட்சிப்படுத்தப்பட்டுள்ள இயந்திரங்களில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்கினர்.

கண்காட்சி குறித்து தொழில் அமைப்பினர் கூறியதாவது:

உலக அளவில் தயாரிக்கப்படும் நவீன இயந்திரங்களை, திருப்பூரில் அறிமுகம் செய்யப்படும் வகையில், இத்தகைய கண்காட்சியை ஆண்டுதோறும் நடத்த வேண்டும். தற்போது, 40 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ள ஏற்றுமதி வர்த்தகத்தை, ஒரு லட்சம் கோடியாக உயர்த்த நவீன இயந்திரங்கள் திருப்பூருக்கு தேவை.

புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் இயந்திரங்களை இறக்குமதி செய்ய, 'டப்' திட்டத்தை மீண்டும் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். 'நிட்ஜோன்' கண்காட்சி, வளர்ச்சிக்கு வழிகாட்டும் நிகழ்வாக கருதுகிறோம். புதிய யுத்தி, நவீன படைப்புகள் வந்துகொண்டே இருப்பதால், ஓரிடத்தில் அறிமுகம் செய்வதால் மட்டுமே தொழில்துறை பயனடையும். இந்தியாவுக்கு அதீத வாயப்ப்புகள் உருவாகி வருகின்றன; இத்தகைய சூழலில், திருப்பூரில் நடக்கும் கண்காட்சியை, தொழில்துறையினர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

பட விளக்கம்

'நிட்ஜோன் - 2025' பின்னலாடை அதிநவீன இயந்திரங்கள் கண்காட்சி அரங்கை, 'டாஸ்மா' தலைவர் அப்புகுட்டி திறந்து வைத்தார். (இடமிருந்து) ஸ்ரீபுரம் அறக்கட்டளை தலைவர் ஜெயசித்ரா சண்முகம், 'சைமா' தலைவர் ஈஸ்வரன், 'நிட்மா' தலைவர் ரத்தினசாமி, ஏற்றுமதியாளர்கள் சங்க பொருளாளர் கோபாலகிருஷ்ணன், 'டெக்பா' தலைவர் ஸ்ரீகாந்த், கண்காட்சி அமைப்பாளர்கள் பரத், கார்த்திகேயன் உள்ளிட்டோர்.

கண்காட்சியில் இடம் பெற்ற பிரின்டிங் இயந்திர செயல்பாட்டை, தொழில் துறையினர் பார்வையிட்டனர்.

வளர்ச்சிக்கான கண்காட்சி

கண்காட்சி அமைப்பாளர்கள் கார்த்திகேயன், பரத், ஸ்ரீதர் கூறுகையில், ' கண்காட்சியில், 30 ஆயிரம் சதுரடியில், குளிரூட்டப்பட்ட, 250 ஸ்டால்கள் அமைத்துள்ளோம். கண்காட்சி, தினமும், காலை, 10:00 மணி முதல், இரவு, 7:30 மணி வரை, 26ம் தேதி வரை நடக்கும். திருப்பூர் பின்னலாடை தொழிலில் வளர்ச்சி மற்றும் உற்பத்தி மேம்பாட்டுக்கு 'நிட்ஜோன்' கண்காட்சி உதவியாக இருக்கும்,' என்றனர்.

Advertisement